அடுத்த சம்பவத்தை செய்த நாதக.. கால்நடைகளுக்கு முன் உணர்ச்சி பொங்க பேசிய சீமான்..!
ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மதுரை மாவட்டம், விராதனூர் பகுதியில் "ஆடு-மாடுகளின் மாநாடு" இன்று நடைபெற்றது. இந்த மாநாடு கால்நடைகளுக்கு மேய்ச்சல் உரிமையை முறையாக வழங்கக் கோரி நடத்தப்பட்டது. குறிப்பாக வனத்துறையினரால் விதிக்கப்பட்ட, வன நிலங்களில் ஆடு-மாடுகளை மேய்க்க தடை விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கக் கோருவதை மையமாகக் கொண்டது.
இந்த மாநாட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் மேய்ச்சல் உரிமையை வலியுறுத்துவதுடன், இயற்கை விவசாயம், தற்சார்பு பொருளாதாரம், மற்றும் பாரம்பரிய வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் சுமார் 2000 கால்நடைகள் மாநாட்டு இடத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ரிதன்யாவின் மரணம் தற்கொலை அல்ல, அது திட்டமிட்ட கொலை.. சாட்டையை சுழற்றிய சீமான்..!
பின்னர் மாநாட்டில் பேசிய சீமான், ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்றும் திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன். இனி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்? என்றும் பேசினார்.
என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார். அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார். மேலும் காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சீமான் கூறினார்.
இந்த மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், கவனம் பெற்றதாகவும் கருதப்படுகிறது, ஏனெனில் இது பாரம்பரிய விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு உரிமைகளை மையப்படுத்திய முதல் பெரிய மாநாடாக பார்க்கப்படுகிறது.
சீமானின் மாநாடு பாரம்பரிய வாழ்க்கை முறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக சிலர் பாராட்டினாலும், ஒரு சிலர் இந்த மாநாட்டை "பின்னோக்கி செல்லும் முயற்சி" என்று விமர்சித்தனர், மேலும் இது திராவிட அரசியல் கட்சிகளுக்கு எதிரான அரசியல் நகர்வாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.
இதையும் படிங்க: நின்னா வரி, நடந்தா வரி.. சோத்துக்கு கையேந்த வச்சு வயித்துல அடிக்க பாக்குறீங்களா? விளாசிய சீமான்..!