×
 
☰

அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்: சேலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களைப் பயன்படுத்திப் பொதுமக்களிடம் அத்துமீறி அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, அந்தப் பேருந்துகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் எனத் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளார்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் வருகை தந்தார். முன்னதாக மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாகக் கொடிக்கயிறு ஒன்று அறுந்ததால் தேசியக் கொடி தலைகீழாக ஏறியது. உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட அமைச்சர், கொடியைக் கீழே இறக்கி, கயிற்றைச் சரிசெய்து மீண்டும் தேசியக் கொடியை முறைப்படி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாநில அளவிலான தடகளப் போட்டிகளை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன், ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் ஆட்டோக்களுக்குப் புதிய மீட்டர் கட்டணம் நிர்ணயிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களும், அவர்களைச் சார்ந்துள்ள குடும்பத்தினரும் பெருமளவில் பயன்பெறுவர்.

இதையும் படிங்க: விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மேலும், தொடர் விடுமுறை மற்றும் திருவிழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அனைத்துத் தனியார் ஆம்னி பேருந்துகளையும் ஒரே குடையின் கீழ் இணைத்து, பயணிகள் வெளிப்படைத்தன்மையுடன் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏதுவாக அரசின் சார்பில் புதிய பிரத்யேக செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 

அரசின் கட்டண விதிகளை மீறிப் பயணிகளிடம் பகற்கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன், பேருந்துகள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அத்துடன், விழாக் காலங்களில் பேருந்து நிலையங்களில் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்த, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள முக்கியப் பகுதிகளில் தற்காலிகக் கூடுதல் பேருந்து நிலையங்களை அமைக்கவும் துறை ரீதியான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நொய்யல், தென்பெண்ணையில் சோப்பு நுரையா.? பொறுப்பற்ற பேச்சு.! அமைச்சரை சாடிய வேல்முருகன்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share