×
 

மோடி, அமித்ஷாவுக்கு பதில் சொல்லும் ஒரே தத்துவ தலைவர் ஸ்டாலின்! - ஆ.ராசா எம்.பி. ஆவேச உரை!

இந்தியாவின் அரசியல் சட்டத்தையும், பன்முகத்தன்மையையும் காக்கப் போராடும் ஒரே தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குவதாக திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா புகழாரம் சூட்டினார்.

சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (BLA-2) கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, மத்திய பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். சுமார் 1.5 லட்சம் முகவர்கள் பங்கேற்ற இந்த பிரம்மாண்டக் கூட்டத்தில், திராவிட மாடல் ஆட்சியின் அவசியம் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருடர்களே ஜனநாயகத்தை வாழ விடுங்கள் என்று தெருவில் இறங்கிப் போராடும் நிலை இன்று உள்ளது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் சூழல் நிலவுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கூச்சல் குழப்பம் இல்லாமல், தேர்தல் ஆணையத்தின் தவறுகளை முரசொலி வாயிலாகவும், களப்பணி வாயிலாகவும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் மிக்கத் தலைவரைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. வேறு எந்த மாநிலக் கட்சியும் செய்யாத வகையில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்யும் பணியைத் திமுக முகவர்கள் மிகச்சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.

இதையும் படிங்க: இங்கிருப்பது ஸ்டாலின் படை! - கனிமொழி எம்.பி. அனல் பறக்கும் பேச்சு!

தமிழகத்தில் சுமார் 26.5 லட்சம் பேர் இறந்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் கூறுகிறது. 3.50 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், 66.5 லட்சம் பேர் குறித்தத் தரவுகள் குறித்தும் செய்திகள் வருகின்றன. இவற்றைத் துல்லியமாகக் கண்காணித்து, ஒரு போலி வாக்கு கூடப் பதிவாகாமல் தடுக்கும் மாபெரும் பொறுப்பு முகவர்களாகிய உங்கள் கைகளில் உள்ளது. இதற்காகப் போராடி 5 லட்சம் புதிய வாக்காளர்களை நாம் சேர்த்துள்ளோம். இது இந்தியாவிலேயே எந்த ஒரு அரசியல் இயக்கமும் செய்யாத சாதனை.

85 வயது கடந்தவர்களுக்கு வீட்டிற்கே வந்து வாக்குச் சேகரிக்கும் முறையை நாம் கொண்டு வந்துள்ளோம். ஆனால், வெறும் ஆட்சி அதிகாரத்திற்காக மட்டும் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அம்பேத்கரின் அரசியல் சட்டம் வழங்கியுள்ள இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் உரிமை மற்றும் மொழி அடையாளம் ஆகியவற்றைச் சிதைக்கத் துடிக்கும் சக்திகளிடமிருந்து இந்தியாவைக் காக்க அவர் மீண்டும் வர வேண்டும்.

ஒரே மொழி, ஒரே மதம் என்று பேசும் அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தத்துவ ரீதியாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கத் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். ஒட்டுமொத்த இந்தியாவே இன்று இவரைத் தான் உற்று நோக்குகிறது. 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற முழக்கத்தோடு 2026 தேர்தலை நோக்கி நாம் வெற்றி நடை போடுவோம் என ஆ.ராசா முழங்கினார்.

இதையும் படிங்க: சென்னையில் கம்பீரமான குடியரசு தின விழா: ஆளுநர் ரவிக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share