உதகை மண்சரிவில் ஓட்டுநர் பலி!! அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பிய 50 பயணிகள்! நடத்துனரின் அதிர்ச்சி வாக்குமூலம்!
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நீலகிரி: உதகை அருகே பர்லியாறு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்த நிலையில், நடத்துநர் கேசவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனமழையால் ஏற்பட்ட இந்தச் சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மண்சரிவு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை (அக். 24) காலை உதகை அருகே பர்லியாறு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து மண்சரிவில் சிக்கியது.
இதையும் படிங்க: உதகைக்கு வராதீங்க! பேய் மழையில் திக்குமுக்காடும் நீலகிரி! சுற்றுலாப் பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வார்னிங்!
சாலையில் திடீரென மண் சரிந்து விழுந்ததில் பேருந்து பாதிக்கப்பட்டது. அப்போது பேருந்துக்குள் இருந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சிக்கிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டயர் பஞ்சரானதால் பயணிகள் உயிர்த் தப்பினர்
இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக, பேருந்தின் டயரில் பஞ்சர் ஏற்பட்டதால் பயணிகள் அனைவரும் பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் மண்சரிவின்போது பேருந்துக்குள் இல்லாததால் உயிர்த் தப்பியுள்ளனர்.
இருப்பினும், பேருந்தின் ஓட்டுநர் ஜனகராஜ் மற்றும் நடத்துநர் கேசவன் ஆகியோர் அங்கு சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் சடலமாக மீட்பு; நடத்துநருக்கு தீவிர சிகிச்சை
மண்சரிவில் சிக்கிய பேருந்துக்குள் இருந்து ஓட்டுநர் ஜனராஜின் உடல் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நடத்துநர் கேசவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது பற்றி உதகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரசு பேருந்தின் நடத்துனர் கூறுகையில், “கோவைக்கு செல்லும் வழியில் பேருந்தின் மீது மரம் விழுந்துவிட்டது. இரண்டு பக்கமும் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. தண்ணீரும் கொட்டிக் கொண்டிருந்தது. முன்னதாக பயணிகள் இறங்கிவிட்டனர். நானும் ஓட்டுனரும் தான் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டோம்” என்று தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் கமலி, சம்பத் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையைத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மலைப்பாதைகளில் மண்சரிவு அபாயம் நீடிப்பதால், பொதுமக்கள் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நீலகிரியில் அடுத்தடுத்து மண்சரிவு! உயிர்பயத்தில் தவித்த 150 மாணவர்கள்!! கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர்!!