அதிமுகவில் இணையவே விருப்பம்..!! டிடிவி நினைத்தால் அது நடக்கும்..!! ஓபிஎஸ் ஓபன் டாக்..!!
டிடிவி தினகரன் நினைத்தால் கண்டிப்பாக அதிமுகவில் என்னை இணைக்க முடியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) தனது அரசியல் நிலைப்பாட்டை இதுவரை வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வருகிறார்.
அவரது ஆதரவாளர்களில் பலர் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) உள்ளிட்ட பல்வேறு அணிகளில் இணைந்து விட்ட நிலையிலும், ஓ.பி.எஸ். மவுனம் காத்து வருவது கட்சி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த இரு நாட்களாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். மாநிலம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!
இக்கூட்டத்தில், எதிர்கால அரசியல் பாதையை வகுக்கும் வகையில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. அதிமுக-பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் இணைந்துள்ள நிலையில், ஓ.பி.எஸ்.வுக்கு அதிமுகவில் முக்கிய பொறுப்பு அல்லது இரட்டை இலை சின்னத்தில் தேர்தல் வாய்ப்பு வழங்கப்படாது என்ற கருத்துகள் பரவி வருகின்றன. இதனால் அவர் தனது முடிவை தாமதப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மாறாக, அமமுக தலைமையிலான அணியில் குக்கர் சின்னத்தில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களில் இருவருக்கு சீட் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்ற ஓ.பி.எஸ்., கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாபழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லது தவெக அணியில் அவர் இணையலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. இன்றைய கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கருத்துகளை துண்டுச்சீட்டில் எழுதித் தருமாறு ஓ.பி.எஸ். கேட்டிருந்தார். ஆனால், பெரும்பாலானவர்கள் “நீங்கள் சுயமாக முடிவெடுங்கள், எதுவாக இருந்தாலும் ஏற்போம்” என்று கூச்சலிட்டனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது: “சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிமுக தொண்டர்களை ஒன்றிணைப்பதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டது எனது செல்வாக்கை நிரூபிக்க மட்டுமே. அங்கு என்னை தோற்கடிக்க 6 ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
அதிமுக இன்னும் வலிமையாக உள்ளது. பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைந்தால் திமுகவை எளிதில் வீழ்த்தலாம். இதைத்தான் நான் வலியுறுத்தி வருகிறேன். சமூக ஊடகங்கள் மற்றும் சில யூடியூப் சேனல்களில் நான் வேறு அணியில் இணையப் போவதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவற்றை நிறுத்த வேண்டும்.
டிடிவி தினகரன் என்னை இணைக்குமாறு கோரியது அவரது நல்லெண்ணத்தைக் காட்டுகிறது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி இதற்கு தயாரா என்பதை அவர் கேட்டறிய வேண்டும். நான் இணைய தயாராக உள்ளேன். நான் 2-வது தர்மயுத்தம் நடத்தியதற்கு காரணமே வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்குமார்தான் காரணம். ஒன்றிணைப்பு முயற்சிகளை டி.டி.வி. தினகரன் மேற்கொண்டால் சட்டப் போராட்டம் முடிவுக்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க: "நாங்க எப்போவுமே ஒண்ணுதான்!" தினகரன் உடனான நெருக்கம் குறித்து ஓ.பி.எஸ் சூசக பதில்!