இந்த 5 மாவட்டங்களில் இன்று ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை... வெளியானது அதிமுக்கிய அலர்ட்...!
திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்பதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் கனமழை பெய்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டுவிட்டுப் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் மூன்று அடி உயர்ந்து 119 அடியைத் தொட்டது. போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான குரங்கணி, கொட்டக்குடி, போடிமெட்டு உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதையும் படிங்க: கொட்டித் தீர்க்கும் பெருமழை: நெல்லை, குமரிக்கு ரெட் அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
இதனால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஆறு அடி உயர்ந்து 119 அடியை நெருங்கியுள்ளது. இதன் காரணமாக, அணைக்கு வரும் 387 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுவதால், வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழனி, விராலிமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கும்பகோணம் பகுதியில் ஒரு மணி நேரம் பெய்த மழை, பகலில் கொளுத்திய வெயிலுக்கு இதமாக அமைந்தது.
திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதால், அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, மேலும் வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அது நாளை மறுநாள் புயலாக மாற வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்பதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லக் கூடாது என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இதையும் படிங்க: கடைசி நேரத்தில் இப்படியொரு ட்விஸ்ட்டா?... “ஸ்கூலுக்கு வராதீங்க”... இந்த மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை...!