×
 

தமிழகத்தில் 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! மே 26-ல் பருவமழை தொடக்கம்!

மே 26-ல் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து அநேக இடங்களில் குளுமையான சூழல் நிலவி வரும் வேளையில், நடப்பு ஆண்டிற்கான தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே தொடங்க வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலச் சுழற்சிகள் காரணமாகத் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையானது கேரளப் பகுதிகளில் வரும் மே 26-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று மாலை முழுமையாக வலுவிழந்த போதிலும், தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது மூன்று முக்கிய வளிமண்டலச் சுழற்சிகள் நிலவி வருகின்றன:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் 3.1 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது. மேற்கு விதர்பா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக 0.9 கி.மீ உயரத்தில் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நீடிக்கிறது. வடகிழக்கு தமிழகத்தின் மேல் 1.5 கி.மீ உயரத்தில் மற்றொரு வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.

இதையும் படிங்க: வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு.. 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! 

இந்த வளிமண்டல மாற்றங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று (மே 17): நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை (மே 18): மழையின் வேகம் அதிகரித்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

மே 19 முதல் 21 வரை: மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும் தொடரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அரியலூர் சுத்தமல்லி அணை மற்றும் திருச்சி நாவலூர் கோட்டப்பட்டில் அதிகபட்சமாகத் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகக் கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மே 21 வரை மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் அந்தமான் கடல் மற்றும் அரபிக்கடலின் கேரளா-கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கும் மே 18 வரை மீனவர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளுகுளுவென மாறப்போகும் 12 மாவட்டங்கள்..!! மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share