அரசியல் சினிமா அல்ல, பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது - விஜய் குறித்து ப. சிதம்பரம் விமர்சனம்!
சினிமா படப்பிடிப்பில் தவறு நடந்தால் 'ரீடேக்' செய்துகொள்ளலாம். ஆனால், அரசியலில் அப்படிச் செய்ய முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் விஜயை விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள காயா வயல் கிராமத்தில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது முதல் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் காரைக்குடிக்கு வந்து பேசாமல் சென்றதைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சினிமா புகழை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் வெற்றி பெற முடியாது என அவர் தனது பிரசாரத்தின் போது மக்களிடையே தெரிவித்தார். அரசியல் என்பது சினிமா போன்றது அல்ல. சினிமாவில் தவறு நடந்தால் 'ரீ-டேக்' (Re-take) செய்யலாம், ஆனால் அரசியலில் அப்படிச் செய்ய முடியாது. இங்கு மக்கள் நலனே முக்கியம்" என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டார்.
"அரசியலில் பேசாமல் ஒன்றும் செய்ய முடியாது. காரைக்குடிக்கு வந்த விஜய், மக்களிடையே பேசாமல் சென்றிருக்கிறார். அவருக்குத் தேவையான அரசியல் அனுபவம் இல்லை என்பதையே இது காட்டுகிறது" என அவர் சாடினார்.
இதையும் படிங்க: வேட்புமனு பரிசீலனை: எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிப்பு!
காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் மாங்குடி, ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார். அவர் ஏற்கனவே 2021 முதல் 2026 வரை இப்பகுதியின் எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காரைக்குடி தொகுதியில் போட்டி அனல் பறக்கிறது. சீமான் (NTK) காரைக்குடியில் போட்டியிடும் வேளையில், தவெக தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்து வருகிறார். விஜய்யின் வருகை காரைக்குடியில் பெரும் கூட்டத்தை ஈர்த்திருந்தாலும், அவர் பேசாமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், காரைக்குடி போன்ற முக்கியத் தொகுதிகளில் மூத்த அரசியல் தலைவர்களின் விமர்சனங்கள் தேர்தல் முடிவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!