வாடிவாசலில் மல்லுக்கட்டிய மாவீரர்கள்! பாலமேடு ஜல்லிக்கட்டில் 'குலுக்கல்' முறையில் முதல் பரிசு வென்ற அஜித்!
பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி குலுக்கல் முறையில் பொந்துகம்பட்டியைச் சேர்ந்த வீரர் அஜித் 16 காளைகளை அடக்கி கார் பரிசாக வென்றார்.
விறுவிறுப்பாக நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் அஜித்தும் பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி சமநிலையில் இருந்த நிலையில், குலுக்கல் முறையில் அஜித் முதல் பரிசான காரை தட்டிச் சென்றார். 870 காளைகள் சீறிய இந்த மாபெரும் போட்டியில் சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி, வீரத்திற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் கோலாகலமாக நிறைவடைந்தது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ரத்தமும் வியர்வையும் கலந்த வீர விளையாட்டில், வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த 870 காளைகளை அடக்க 461 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி மல்லுக்கட்டினர். பலத்த பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்தப் போட்டியில், விதிமுறைகளை மீறியதாக 24 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு சுற்றிலும் வீரர்கள் தங்களின் அபாரமான திறமையை வெளிப்படுத்தினர். இறுதிச் சுற்றில் தகுதி பெற்ற 61 வீரர்கள் களமிறங்கிய நிலையில், போட்டி முடிவில் ஒரு சுவாரசியமான திருப்பம் ஏற்பட்டது. பொந்துகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அஜித்தும், பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனும் தலா 16 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டனர். வெற்றியாளரைத் தீர்மானிப்பதில் கடும் போட்டி நிலவியதால், நடுவர்கள் குலுக்கல் முறையைப் பின்பற்ற முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே.. ஜல்லிக்கட்டு பார்க்க ரெடியா..!! பாலமேடு, அலங்காநல்லூரில் ஏற்பாடுகள் தீவிரம்..!!
குலுக்கல் முறையில் அதிர்ஷ்டம் பொந்துகம்பட்டி அஜித்தை நோக்கி வீசியது. இதனைத் தொடர்ந்து, பாலமேடு ஜல்லிக்கட்டின் சிறந்த மாடுபிடி வீரராக அறிவிக்கப்பட்ட அஜித்துக்கு முதல் பரிசான சொகுசு கார் வழங்கப்பட்டது. சமநிலையில் இருந்த மற்றொரு வீரர் பிரபாகரனுக்கு இரண்டாம் பரிசாக விலையுயர்ந்த இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. அதேபோல், காளைகளுக்கான போட்டியில் குலமங்கலம் ஸ்ரீதர் என்பவரது காளை சிறந்த காளையாகத் தேர்வு செய்யப்பட்டது. அதன் உரிமையாளருக்குத் தமிழக அரசின் சார்பில் மெகா பரிசாக டிராக்டர் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் கார் மற்றும் டிராக்டர் தவிர, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், எல்.இ.டி தொலைக்காட்சிப் பெட்டிகள், பீரோக்கள் மற்றும் சைக்கிள்கள் எனப் ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வாரி வழங்கப்பட்டன. காயமடைந்த வீரர்களுக்கு மைதானத்திலேயே அமைக்கப்பட்டிருந்த அவசரச் சிகிச்சை மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. இந்தப் போட்டியைப் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டு ரசித்தனர், இது மதுரை மண்ணின் வீரப் பாரம்பரியத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
இதையும் படிங்க: அலங்காநல்லூரில் சீறப்போகும் காளைகள்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! முன்னேற்பாடுகள் தீவிரம்!