×
 

பழனி நில மோசடி விவகாரத்தில் மெகா ட்விஸ்ட்... சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் காரியம்...!

பழனி ரூ.100 கோடி மதிப்புள்ள நில முறைகேடு வழக்கில் நிலத்தை விற்றவரும் வாங்கிய இருவரும் தலைமறைவு

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில முறைகேடு வழக்கில், நிலத்தை விற்றவரும் வாங்கிய இருவரும் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலின் அடிவாரத்தில் தண்டாயுதபாணி மடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.100 கோடி என கூறப்படுகிறது.

இந்த நிலம் வெறும் ரூ.2 கோடிக்கு தனிநபர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த புகார் கடந்த ஒரு வாரமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பழனி ரூ.100 கோடி கோயில் நில மோசடி... களமிறங்கிய சிபிசிஐடி.. அடுத்தடுத்து சிக்கப் போவது யார்?

இந்த விவகாரம் தொடர்பாக, முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்றொரு புறம், காவல்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதன் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், கூட்டுச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி ஆவணங்களை உண்மையானவை என நம்ப வைத்து பயன்படுத்துதல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மடத்தின் அறக்கட்டளை நிர்வாகியாகக் கருதப்படும் முருகதாஸ் சுவாமிகள், நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் பழனியைச் சேர்ந்த சேதுபதி மற்றும் உடுமலையைச் சேர்ந்த வெள்ளத்துரை ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதும், முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்துள்ளனர்.

பத்திரப்பதிவு நடைபெற்ற நேரத்தில் அலுவலகத்திற்கு யார் யார் வந்திருந்தனர், ஆவணங்களை தயாரித்தவர்கள் யார், நிலத்தை வாங்கியவர்கள், விற்றவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக இந்த சிசிடிவி காட்சிகள் முக்கிய ஆதாரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், அந்த பத்திரப்பதிவை மேற்கொண்ட இணை சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை உடனடியாக கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், நிலத்தை விற்றவர் மற்றும் வாங்கிய இருவரை கைது செய்யும் நடவடிக்கையை சிபிசிஐடி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சிபிசிஐடியின் சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இணை சார்பதிவாளர், நிலத்தை வாங்கிய இருவர் மற்றும் நிலத்தை விற்ற ஒருவர் என மொத்தம் நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், புலன் விசாரணையில் இந்த முறைகேட்டில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்களையும் வழக்கில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காகவே சிசிடிவி காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் அடிப்படையில் தொடர்புடைய நபர்களை விசாரணைக்கு அழைக்கவும், தலைமறைவாக இருந்தால் அவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது.

தேவையெனில் தனிப்படைகளும் அமைக்கப்பட உள்ளன. தலைமறைவாக உள்ளவர்கள் தமிழகத்திற்கு வெளியே வேறு மாநிலங்களுக்கு தப்பிச் சென்றிருப்பது கண்டறியப்பட்டால், அங்கு சென்று அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: பழனி முருகன் கோவில் பத்திரப்பதிவு விவகாரம்..! சார்பதிவாளர் கைதுக்கு இடைக்காலத்தடை..! மதுரை கிளை ஆணை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share