×
 

பழனி முருகன் கோயிலில் டிஜிட்டல் புரட்சி..!! ரோப் கார் முன்பதிவு ஆன்லைனில் தொடக்கம்..!!

இதனால் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவலம் தவிர்க்கப்பட்டு, இடைத்தரகர்களின் தொல்லையும் குறையும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், உலகெங்கும் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் முதன்மையானதாக விளங்குகிறது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் முயற்சியால், பக்தர்களின் வசதியை மனதில் கொண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக, இன்று (திங்கட்கிழமை) முதல் ரோப் கார் பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்தப் புதிய வசதியின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டிலிருந்தே வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்து ரோப் கார் டிக்கெட் பதிவு செய்யலாம். ஒரு நபருக்கு அடிவாரத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் சென்று வர ரூ.100 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை 50 பேரும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மேலும் 50 பேரும் என முதற்கட்டத்தில் தினசரி 100 பக்தர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும். இதனால் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் அவலம் தவிர்க்கப்பட்டு, இடைத்தரகர்களின் தொல்லையும் குறையும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

பழனி முருகன் கோயில் தமிழகத்தைத் தாண்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்களை ஈர்க்கும் திருத்தலம். குறிப்பாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் லட்சக்கணக்கானோர் விரதம் இருந்து மாலை அணிந்து தரிசனம் செய்ய வருகின்றனர். வெள்ளி, செவ்வாய், ஞாயிறு மற்றும் விசேஷ தினங்களில் கோயிலில் கூட்டம் அலைமோதும் நிலை நிலவுகிறது. மலை ஏறும் சிரமத்தைத் தவிர்க்க பலர் ரோப் கார் சேவையை நம்பியிருக்கின்றனர். எனினும், காத்திருப்பு அறை வசதி உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து பக்தர்கள் அடிக்கடி புகார் தெரிவித்து வந்தனர்.

இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏ-வும் மக்கள் பிரதிநிதிதான்! அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்!

இந்நிலையில், சமீபத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பழனி கோயிலில் ஆய்வு மேற்கொண்டபோது பக்தர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்யப்படும் என உறுதி அளித்தார். அதன் தொடர்ச்சியாக, முக்கிய கோயில்களில் ஆன்லைன் சேவைகளை விரைவுபடுத்தும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கால பூஜைகள் மற்றும் மின்இழுவை ரயில் (வின்ச்) பயணத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது. தற்போது ரோப் கார் சேவையும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி நடைபெறும் ஆறு கால பூஜைகளில் பங்கேற்பதற்கு சோதனை அடிப்படையில் 5 டிக்கெட்டுகள் மட்டும் ஒதுக்கி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் கோயிலுக்கு உட்பட்ட தங்கும் விடுதிகளுக்கான அறை முன்பதிவும் ஆன்லைன் மூலம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த டிஜிட்டல் முயற்சிகள் பழனிக்கு வரும் ஏராளமான பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பக்தர்களின் அனுபவத்தை இன்னும் சிறப்பாக்கும் இந்த நடவடிக்கைகள், பழனி முருகனின் தரிசனத்தை இன்னும் எளிதாகவும், சிரமமின்றியும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பழனி கோவிலில் இதற்கெல்லாம் கட்டணம் உயருகிறதா..?? பக்தர்களிடம் கருத்து கேட்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share