முக்கிய புள்ளிகளின் போலி கையெழுத்து... பழனி நில மோசடி வழக்கில் திடுக் திருப்பம்... சிபிசிஐடி கையில் சிக்கிய ஆவணம்...!
வாரிசுதாரர்கள் கையெழுத்தை போலியாக தயாரித்து மோசடி செய்தது அம்பலம்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் 100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக நெல்லையில் வாழும் முருகதாஸ் சுவாமிகளின் வாரிசுதாரர்களிடம் சிபிசிஐடி நடத்திய விசாரணை நிறைவு
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்து மோசடி செய்யப்பட்ட விவகாரம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி பிரமுகர்கள் முருகதாஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது புகார் அளித்தார். காவல்துறையினர் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இதையும் படிங்க: பழனி நில மோசடி விவகாரம்..! சிபிஐ விசாரணை தேவை... அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!
தமிழக அரசு கடந்த 15ஆம் தேதி இந்த வழக்கின் தன்மையை அறிந்து சிபிசிஐடி மாற்றியது. அதனைத் தொடர்ந்து பழனி உடுமலைப்பேட்டை திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த வழக்கை தொடர்புடையவர்கள் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நெல்லை டவுன் சாலியர் தெரு பகுதியில் உள்ள மேடை அலங்கார ஊழியர் சண்முகசுந்தரம் என்பவரது வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக நெல்லை சிபிசிஐடி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
பல மணி நேரம் விசாரணைக்கு பின்னர் சண்முகசுந்தரத்தை சிபிசிஐடி காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது.
அது குறித்து சண்முகசுந்தரத்தை 4 நாட்களாக சிபிசிஐடி காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து பழனி கோவில் நில மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினர்.
4 நாட்கள் விசாரணை தற்பொழுது நிறைவு பெற்றிருக்கிறது. விசாரணையில் சண்முகசுந்தரத்தின் வங்கி கணக்குகளுக்கு ஏதாவது பணம் வந்துள்ளதா, முருகதாஸ் சுவாமிகளின் வாரிசுகள் வேறு எங்கெங்கெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக நெல்லையில் மட்டும் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில் சண்முகசுந்தரம் தான் மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்பாக பிழைப்புக்காக நாங்கள் நெல்லைக்கு வந்து விட்டோம். நில விற்பனை தொடர்பாக எந்த ஆவணங்களிலும் கையெழுத்தும் இடவில்லை என சிபிசிஐடி காவல்துறையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் அடிப்படையில் சண்முக சுந்தரத்தின் கையெழுத்தை நில மாற்றம் நடைபெற்ற பொழுது அதில் ஈடுபட்டவர்கள் போலியாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இன்னும் பல்வேறு ஆவணங்களை சிபிசிஐடி காவல் துறையினர் திரட்டி மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.2 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்தது எப்படி?... வெளியானது பழனி நில மோசடி பத்திரம்...!