மக்களின் வீடு முக்கியமா? புதிய தலைமைச் செயலகம் முக்கியமா? பட்டினப்பாக்கத்தில் எதிர்ப்பு குரல்!!
கடல்சார் தொழில்களை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்கள், தங்கள் இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
சென்னை பட்டினம்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மீனவ சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தற்போது பட்டினம்பாக்கம் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக மீன் பிடித்தல், வலை வீசுதல், பிடித்த மீன்களை விற்பனை செய்தல் போன்ற கடல்சார் தொழில்களை முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மீனவர்கள், தங்கள் இடங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்களோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய மீனவர்கள், “இங்குள்ள கடல் மற்றும் சிறு குறு வியாபாரங்களே எங்களது அன்றாட சோறு. புதிய தலைமைச் செயலகம் வந்தால், நாற்றம் வருகிறது, அசுத்தமாக இருக்கிறது என்று சொல்லி எங்களைக் காலி செய்யச் சொல்வார்கள். மீன் கடைகளை அகற்றச் சொல்வார்கள். அப்போது நாங்கள் எங்கே போவது?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!
ஏற்கனவே திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் அரசுக் கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், மீண்டும் புதிய வளாகம் தேவையா என்றும் அவர்கள் கேட்கின்றனர். வீடு இல்லாதோருக்கு வீடு கட்டித் தருவதைப் போல, பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் வாழ்வாதார ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கை.
லைட்ஹவுஸ் முதல் பட்டினம்பாக்கம் வரை பூர்வீகமாக வாழ்ந்து வரும் இவர்கள், தங்கள் பிள்ளைகள் படித்திருந்தாலும் இடத்தை விட்டுச் செல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த மாதம் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திலும் அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று குறைபடும் மீனவர்கள், “ஓட்டு போட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் எங்களைப் பார்க்கவில்லையே. விளிம்புநிலை மக்களின் தொழிலைப் பாதிக்கும் திட்டங்களை திடீரென அறிவிப்பது நியாயமா?” என்று கேட்கின்றனர்.
திரைப்படங்களில் காணும் வகையில் பெரிய கட்டிடங்களுக்காக சிறு வியாபாரிகள் வெளியேற்றப்படுவதைப் போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கும் முன் மீனவ சமூகத்தின் கருத்துகளைக் கேட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்வு காண வேண்டும் என்பதே தற்போதைய கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகம் இப்படித்தான் இருக்குமாம்... பட்டினப்பாக்கத்தின் புதிய முகம்!! வைரல் புகைப்படம்..!!