×
 

பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு! முதலமைச்சர் விஜய் உத்தரவு!

பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் ச ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போகச் சாகுபடிக்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பெரியாறு அணையிலிருந்து நாளை (08.08.2026) முதல் தண்ணீர் திறந்து விட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக்கட்டுப் பகுதிகளில் முதல் போகச் சாகுபடி நிலங்களுக்கு வினாடிக்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்டம் மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 150 கனஅடி வீதமும் என மொத்தம் வினாடிக்கு 350 கனஅடி தண்ணீர் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படவுள்ளது.

நாளை (08.08.2026) முதல் 120 நாட்களுக்குத் தேவைக்கேற்ப, மொத்தம் 3,629 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் (தண்ணீர் வரத்து மற்றும் நீர் இருப்பைப் பொறுத்து) பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்து விடத் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

இந்த நீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டம், உத்தமபாளையம், தேனி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய தாலுக்காக்களில் உள்ள 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடிப் பாசன வசதியைப் பெறும்.

பாசனத் தேவைகளுடன் இணைந்து, மதுரை மாநகராட்சி மற்றும் தேனி மாவட்டப் பகுதிகளுக்கான குடிநீர் தேவையும் இதன் மூலம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படும்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share