×
 

பெரியார் சமத்துவப் பாதையில் சமூகநீதியை வென்றெடுப்போம்... தந்தை பெரியாருக்கு விஜய் மரியாதை...!

தந்தை பெரியார் நினைவு தினத்தை ஒட்டி தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி நினைவு தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1973-ஆம் ஆண்டு இதே நாளில், 94 வயதில் காலமான பெரியார், சமூக சீர்திருத்தத்தின் மாபெரும் சின்னமாகவும், பகுத்தறிவுவாதியாகவும், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றுவிப்பாளராகவும் திகழ்ந்தவர். 1924 இல் கேரளாவின் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுக்கு நடந்த போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். இதனால் "வைக்கம் வீரர்" என்ற பட்டம் பெற்றார்.

1925 இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். இது சாதி ஒழிப்பு, பெண் உரிமை, பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தியது. சுயமரியாதைத் திருமணங்கள், பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்தினார்.1939 இல் நீதிக்கட்சியின் தலைவரானார். 1944 இல் அதை திராவிடர் கழகமாக மாற்றினார். திராவிட இனம், ஆரிய ஆதிக்க எதிர்ப்பு, தனி திராவிட நாடு கோரிக்கை ஆகியவை அவரது அரசியலின் முக்கிய அம்சங்கள். இந்தி திணிப்புக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தினார். 

தமிழ்நாட்டில் பெரியாரின் நினைவு தினம் என்றாலே அது அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களால் பெரிதும் போற்றப்படும் நாள். ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கும், பெரியார் திடலில் உள்ள அவரது உருவப்படத்துக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இதையும் படிங்க: ஆதிக்கத்தை சுட்டெரித்த பேரொளி... என்றும் பெரியார் சமூக நீதிப் பாதையில்...! EPS புகழ் மகுடம்...!

இந்த நிலையில், தந்தை பெரியார் திருவுருவப் படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். சமூக நீதியின் முன்னோடி, சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி தந்தை பெரியார் என தெரிவித்துள்ளார். எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு தனது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தியதாக கூறினார். தந்தை பெரியார் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம் என்றும் விஜய் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: தந்தை பெரியார் இல்லைனா... ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆரவாரப் பேச்சு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share