பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! மேற்காசிய போரால் நீடிக்கும் பதற்றம்! எகிறும் ரேட்!
சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: நாடு முழுவதும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 10 காசுகள் உயர்ந்து ₹103.77-க்கும், டீசல் 10 காசுகள் உயர்ந்து ₹95.35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று நாடு தழுவிய அளவில் பெட்ரோல் லிட்டருக்கு ₹3.14ம், டீசல் லிட்டருக்கு ₹3.11ம் உயர்த்தப்பட்டது. இதன்படி சென்னையில் பெட்ரோல் ₹103.90 வரையிலும், டீசல் ₹95.47 வரையிலும் சென்றடைந்தது. தொடர்ந்து சிறிய அளவில் விலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போதைய விலை நிலவரம் இதுவாகும். ஒரு கிலோ சிஎன்ஜி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ₹91.50-க்கு விற்கப்படுகிறது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழல் மற்றும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தை நிலவரத்தின்படி, இன்னும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ₹28 வரை உயர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் அன்றாட செலவுகளை பெருமளவு பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க: மக்களுக்கு அறிவுரை மட்டுமே வழங்குகிறார் பிரதமர்! நெல்லையில் கனிமொழி எம்பி விமர்சனம்!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை நிச்சயம் பாதிக்கும். ஏற்கெனவே பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை விலை உயர்வை ஈடுகட்ட சில மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசும் இந்த விலை உயர்வின் தாக்கத்தை குறைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக தினசரி பயணம் செய்பவர்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் இயக்குபவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். வரும் நாட்களில் சர்வதேச அரசியல் சூழல் எப்படி மாறுகிறது என்பதைப் பொறுத்து எண்ணெய் விலை மேலும் ஏறலாம் அல்லது சற்று குறையலாம் என்ற நிலை நிலவுகிறது.
இதையும் படிங்க: லஞ்ச் ஆர்டர் பண்ண போறீங்களா? ஒரு நிமிசம்!!! ஸ்விக்கி, சோமோட்டோ ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்!