×
 

நிரம்பியது பில்லூர் அணை... 8,000 கனஅடி நீர் திறப்பு! பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து வினாடிக்கு 8,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ள பில்லூர் அணை, தொடர் கனமழையால் தனது முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதிகாரிகள் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்து விட்டுள்ளதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. இதையடுத்து ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனால் அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உயர்ந்தது.

அதன் பின்னரும் நீர்வரத்து குறையாததால், 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, வெள்ளப்பெருக்கு நிலை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் நடைபெறும் எஸ்.சி.ஓ. உச்சி மாநாடு... பிரதமர் மோடிக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்க முடிவு!

இதையடுத்து பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஆற்றில் குளிப்பது, துணி துவைப்பது, மீன்பிடிப்பது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் பொதுமக்கள் ஈடுபடக் கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திடீரென நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு தேவையில்லாமல் செல்ல வேண்டாமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நிலைமையைப் பொறுத்து கூடுதல் அளவில் நீர் திறக்கப்படலாம் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சம்... ரூ.2.11 லட்சம் கோடியை தாண்டிய வருவாய்; தமிழ்நாட்டுக்கு ரூ.7,391 கோடி பங்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share