பிரதமர் மோடி சென்னை வருகை: மீனம்பாக்கம், கிண்டி பகுதிகளில் Red Zone அமல்! டிரோன்கள் பறக்கத் தடை!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதனையொட்டி சென்னையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 23-ஆம் தேதி சென்னை வருகிறார். அன்று மதியம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்குச் செல்கிறார். பிரதமரின் இந்த வருகையையொட்டி, சென்னை மாநகரக் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறிப்பாக, பிரதமர் வந்து இறங்கும் மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் அவர் தங்கியிருக்க வாய்ப்புள்ள கிண்டி ராஜ்பவன் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, இந்த பகுதிகளில் டிரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAV), வெப்பக்காற்று பலூன்கள் மற்றும் கிளைடர்கள் போன்றவற்றை இயக்குவதற்குத் தமிழகக் காவல்துறை முழுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது வான்வெளியில் இத்தகைய கருவிகளைப் பறக்கவிட்டால், அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: நெருக்கடியான தருணங்களில் தீர்க்கத்துடன் முடிவெடுப்பவர்கள்..!! NDRF படையினரை புகழ்ந்த பிரதமர் மோடி..!!
பிரதமரின் பாதுகாப்பிற்காக டெல்லியில் இருந்து வந்த சிறப்புப் பாதுகாப்புக் குழு (SPG), சென்னை விமான நிலையம் மற்றும் மதுராந்தகம் பொதுக்கூட்ட மைதானத்தில் இன்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர். சென்னை முழுவதும் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். விடுதிகள், தங்கும் விடுதிகள் மற்றும் வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தடை உத்தரவு இன்று முதல் பிரதமர் டெல்லி திரும்பும் வரை நடைமுறையில் இருக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி - இபிஎஸ்! மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணி அறிவிப்பு? நயினார் நாகேந்திரன் அதிரடி!!