"பாமக-வைக் கைப்பற்ற சதி!" ஜி.கே. மணி மற்றும் அவரது மகனுக்கு எதிராகப் பாமக வழக்கறிஞர் பாலு புகார்!
ஜி.கே. மணியும் அவரது மகனும் இணைந்து பா.ம.க.-வைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக பாமக வழக்கறிஞர் பாலு குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, அக்கட்சியின் வழக்கறிஞர் கே. பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜி.கே. மணி தரப்பின் செயல்பாடுகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பா.ம.க.வை கைப்பற்றும் முயற்சி முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று உறுதிபடத் தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதும், கட்சியின் நிர்வாகத்தின் மீதும் தீய எண்ணம் கொண்டு ஜி.கே. மணி செயல்பட்டு வருவதாகப் பாலு குற்றம் சாட்டினார். ஜி.கே. மணியும் அவரது மகனும் இணைந்து பாமக-வைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தச் சதிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்களின் முயற்சிகள் அனைத்திலும் தோற்றுள்ளார்கள் என்றும் கூறினார்.
"அன்புமணி ராமதாஸுக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகார் மனுவில், தேர்தல் குழுவின் கடிதமே போலியானது என்ற சந்தேகம் உள்ளது. வேண்டுமென்றால், அன்புமணி மீதும், தேர்தல் குழுவின் மீதும் புகார் கொடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 2013-ஆம் ஆண்டு ஜி.கே. மணி கட்சி விதிகளை மாற்றிக் கொடுத்தது மோசடி இல்லையா என்று பாலு கேள்வி எழுப்பினார். பாமக தொடர்பான வழக்குகளில் தவறான தகவல்களைத் தந்ததற்காக, ஜி.கே. மணி தரப்பினர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சி வழக்குத் தொடர முடியும் என்று பாலு எச்சரித்தார்.
இதையும் படிங்க: "இந்து விழாக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுப்பது ஏன்?" - முதலமைச்சருக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
டெல்லி உயர் நீதிமன்றத்திலும் இதேபோன்ற தவறான ஆதாரங்களைத் தாக்கல் செய்திருப்பதாகவும், ஆனால் நீதிமன்றம் சிவில் வழக்குத் தொடரவே அறிவுறுத்தியது என்றும் அவர் தெரிவித்தார். அங்கீகரிக்கப்படாத ஒரு கட்சியின் உட்பூசலில் தேர்தல் ஆணையம் தலையிடாது என்று தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் கூறியதை ஜி.கே. மணி தரப்பு தவறாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் பாலு கூறினார்.
தலைவர் பதவிக்காலம்: அன்புமணி ராமதாஸ் மே 2022-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் மே 2025 வரை உள்ளது என்று ஜி.கே. மணி தரப்பு ஏற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், ஏப்ரல் 9, 2025-இல் அன்புமணி ராமதாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, தலைவர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டதாக தவறான தகவல்களை அவர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்ததாகப் பாலு குற்றம் சாட்டினார். இது முற்றிலும் தவறான செய்தி என்றும், அவர் தொடர்ந்து தலைவராக நீடிக்கிறார் என்றும் வலியுறுத்தினார்.
கட்சிக்குள் பிரச்சினை எழுந்த பிறகு, ஜி.கே. மணி தரப்பு எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிவிட்டது. முதலில் பாத யாத்திரைக்குத் தடை கோரிச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள், அதில் தோற்றார்கள். பின்னர் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள், அதுவும் அவமானமாக முடிந்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள், அதிலும் தோற்றார்கள் என்று பாலு சுட்டிக்காட்டினார்.
"இவர்கள் இன்று என்ன செய்தாலும் அது தள்ளுபடி செய்யப்படும். நீதி எங்களுடனேயே இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் 100% படித்த மக்கள் அன்புமணிக்குப் பின்னால் இருக்கிறார்கள். ஜி.கே. மணி இப்போது சிறு மனம் கொண்ட மனிதராக மாறிவிட்டார். அவரை வேறு சிலர் கைப்பாவையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். இந்த உண்மை விரைவில் வெளிவரும்" என்றும் பாலு ஆவேசமாகப் பேசினார்.
இதையும் படிங்க: மதுரை மாநாட்டில் ரூ.36,660 கோடி முதலீடு! 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு!- முதல்வர் ஸ்டாலினின் மெகா திட்டம்!