×
 

ரீலு அந்துபோச்சு..! கொலை முயற்சி அல்ல விபத்து தான்..! ஓவர் ஸ்பீடு டிரைவர் மீது வழக்கு..!

கார் விபத்தில் தன்னை திட்டமிட்டு கொல்ல சதி நடப்பதாகவும், இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டிய நிலையில், அதிவேகமாக கார் ஓட்டியதாக அவரின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை அருகே காட்டாங்குளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்து வருகிறது. மே 5 வரை நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க நேற்று காலை மதுரை ஆதினம் காரில் புறப்பட்டு சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டையில் அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்து செல்ல முயன்றபோது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மோதியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என ஆதினம் சந்தேகம் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் முன்னிலையில் மதுரை ஆதீனம் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் கூறியதாவது; மோதிய காரில் பதிவெண் இல்லை. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த இருவர் தங்கள் மத அடையாளங்களுடன் இருந்தனர். தொடர்ந்து சமூக பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்து வருவதால் என்னை கொல்ல திட்டமிட்டு என்னை பின் தொடர்ந்து அவர்கள் வந்திருக்கலாம். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: கொலை முயற்சி? மதுரை ஆதினம் அளித்த புகார்.. சிசிடிவி காட்சியை வெளியிட்ட போலீஸ்..!

இதேபோல் சில மாதங்களுக்கு முன் திருச்சி அருகே சென்றபோது தனது பயணம் குறித்து கார் டிரைவர் மர்மநபர்களிடம் தொடர்ந்து பேசி வந்ததாகவும், அதனால் உயிருக்கு ஆபத்து எனக்கருதி அவரை வேலையில் இருந்து நீக்கியதாகவும் மதுரை ஆதினம் கூறினார். இந்த நிலையில் விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர்.  

மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே, கொலைக்கான எந்த சதியும் நடக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர். அதில், வமதுரை ஆதீனம் மடாதிபதி மதுரையிலிருந்து சென்னையில் நடைபெறும் சைவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2-ம் தேதி உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை சென்றார். அப்போது உளுந்தூர்பேட்டை அடுத்த அஜீஸ் நகர் ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் உள்ள நிலையில் சென்னை செல்வதற்கு மேம்பாலத்தின் வழியாக மதுரை ஆதீனம் சென்ற கார் செல்லாமல் கீழே பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை நோக்கி செல்லக்கூடிய சாலையில் மதுரை ஆதீனம் சென்ற FORTUNER கார் அதிவேகமாக சாலையை கடக்க முயன்று உள்ளது.

அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த மாருதி சுசுகி கார் ஒன்று உளுந்தூர்பேட்டை சேலம் ரவுண்டானா முன்பு வைக்கப்பட்டிருந்த பேரிகாடை கடந்து மெதுவாக முன்னேறி வந்தது. அந்த கார் மதுரை ஆதினம் சென்ற வாகனத்தின் பக்கவாட்டில் உரசியதில் மாருதி சுசுகி வாகனத்தின் முன்பகுதியும் FORTUNER காரின் இடது பக்கத்திலும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு கார்களில் வந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு அவர்கள் சுமார் 10 மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர் என போலீசார் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது.

உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்தில் சிக்கியது சாதாரண விபத்து மட்டுமே என்றும், மதுரை ஆதீனத்தை கொள்வதற்கான எந்த சதியும் நடைபெறவில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். இந்த சூழலில் விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் காரை ஓட்டியதாக 2 பிரிவுகளின் கீழ் உளுந்தூர்பேட்டை போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக். கட்டாயம் அனுபவிக்கும்.. தூங்குகிற புலியை இடரினால் இதுதான் கதி.. மதுரை ஆதினம் ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share