நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! 5.56 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு..!!
பாலவாக்கம் அரசு ஆதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணியினை ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் நோக்கில், வரும் ஜூன் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தெற்கு மண்டல துணை ஆணையர் அதாப் ரசூல் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்தியாவில் கடந்த 29 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம், நாட்டை போலியோ இல்லாத நாடாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ இல்லாத நாடாக அறிவித்திருந்தாலும், அண்டை நாடுகளில் இன்னும் போலியோ பாதிப்பு காணப்படுவதால், நோய் மீண்டும் பரவும் அபாயத்தை முற்றிலும் தவிர்க்க இந்த கூடுதல் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான முகாமில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 5.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகரம் முழுவதும் 1,641 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த மையங்கள் செயல்படும். மேலும், மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஜூன் 28-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்! சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவெளியின்றி நடைபெறும் இந்த முகாமில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதும், அவர்கள் தவறாமல் மருந்து பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இடது கை சுண்டுவிரலில் அடையாள மை வைக்கப்படும். எந்த குழந்தையும் முகாமில் இருந்து விடுபடாத வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறந்ததிலிருந்து வழக்கமான தடுப்பூசி அட்டவணைப்படி போலியோ சொட்டு மருந்து பெற்றிருந்தாலும், இந்த சிறப்பு முகாமில் வழங்கப்படும் சொட்டு மருந்தையும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. இது வழக்கமான தடுப்பூசிக்கு மாற்றாக அல்ல; கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு தவணையாகும்.
வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பிற மாநிலங்களில் இருந்து சென்னை வந்து தங்கியிருக்கும் குடும்பங்களின் குழந்தைகளும், அன்றைய தினம் சென்னைக்கு வருகை தரும் குழந்தைகளும் இந்த முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முகாமை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு அரசுத் துறை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தோர் உள்ளிட்ட சுமார் 6,564 பேர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
எனவே, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பெற்றோர் அருகிலுள்ள போலியோ சொட்டு மருந்து மையங்களுக்கு அழைத்துச் சென்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் தவறாமல் சொட்டு மருந்து செலுத்தி, குழந்தைகளின் ஆரோக்கியத்தையும், போலியோ இல்லாத இந்தியா என்ற இலக்கையும் பாதுகாக்க ஒத்துழைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: 3 மாதங்களுக்கு பிறகு நாளை கூடுகிறது சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!