×
 

மிசா விவகாரம் விஸ்வரூபம்!! சட்டமன்றத்தையே அவமதிக்கும் முதல்வர் விஜய்! பொன்முடி கடும் தாக்கு!

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளைக் கண்டித்து, விழுப்புரம் நகராட்சி திடலில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்: சட்டமன்றத்தில் பேசும்போது அவையின் மரபையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆனால் தமிழக முதல்வர் விஜய் சட்டமன்ற மரபை மீறி பேசி வருவதாகவும் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளைக் கண்டித்து, விழுப்புரம் நகராட்சி திடலில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய பொன்முடி, சட்டமன்றத்தில் எதை பேச வேண்டுமோ அதை நாகரிகமாகவும் கண்ணியமாகவும் பேச வேண்டும் என்றார். சட்டப்பேரவையின் மரபை மீறி பேசுவது அவையின் கண்ணியத்தை பாதிக்கும் என்றும், அந்த வகையில் முதல்வர் விஜய் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

இதையும் படிங்க: இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

மிசா சட்டம் தொடர்பாகவும் பொன்முடி தனது கருத்துகளை தெரிவித்தார். நெருக்கடி காலத்தில் கொண்டு வரப்பட்ட மிசா சட்டத்தின் பின்னணி குறித்து சட்டமன்றத்தில் சிலருக்கு முழுமையாக தெரியவில்லை என்றும், அந்த சட்டத்தை ஆதரிப்பது போன்ற வகையில் கருத்துகள் தெரிவிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசியல் ரீதியாக தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது தி.மு.க.–த.வெ.க. இடையிலான அரசியல் மோதலாகவும் மாறியுள்ளது.

தொடர்ந்து பேசிய பொன்முடி, விஜய் ஆட்சிக்கு வந்திருப்பது குறித்தும் விமர்சனம் செய்தார். மக்கள் தெரிந்தோ தெரியாமலோ விஜய்யை ஆட்சியில் அமர வைத்துவிட்டதாக அவர் கூறினார். மேலும், நடைபெற உள்ள இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் தி.மு.க.வினர் செயல்பட வேண்டும் என்றும் கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டமும், பொன்முடியின் கடுமையான விமர்சனங்களும் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க.–த.வெ.க. இடையிலான மோதல் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
 

இதையும் படிங்க: ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும்... தவெக தலையில் குண்டைத் தூக்கிப் போட்ட ஆர்.எஸ்.பாரதி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share