இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய நிபந்தனை ஒன்றை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
த.வெ.க. வேட்பாளர்களுக்கு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், த.வெ.க. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: பெயர் மாற்றும் ஆர்வம் நிதி ஒதுக்கீட்டில் இல்லை... நியாயமா CM..? வெளுத்துவிட்ட அன்பில் மகேஷ்..!!
இதையடுத்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக த.வெ.க. தரப்பில் அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை களமிறக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு த.வெ.க. ஆதரவு அளித்தால், அதற்கு பதிலாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிபந்தனை தொடர்பான தகவல் த.வெ.க. தலைவர் விஜய்யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. த.வெ.க. தலைமையின் முடிவு என்ன என்பது தெரிந்த பின்னரே தங்களது ஆதரவு தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, இடதுசாரி கட்சிகளின் ஆதரவை தங்கள் பக்கம் திருப்ப தி.மு.க. தரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக த.வெ.க. தலைமைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன், இடைத்தேர்தல் தொடர்பாக இடதுசாரி கட்சிகள் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், நிர்வாகக் குழு கூட்டங்களில் ஆலோசனை நடத்தி பின்னர் முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனால் த.வெ.க.வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு கிடைக்குமா அல்லது புதிய அரசியல் சமன்பாடு உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட இளைஞர்களே தயாரா?... தேதியோடு அமைச்சர் அருண் ராஜ் வெளியிட்ட குட்நியூஸ்..!