×
 

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த மாதம் பவர்கட் பிரச்சனைக்கு தீர்வு!! அதிகாரிகள் தகவல்!!

தூக்கமிழந்த மக்கள் சாலை மறியல், மின்வாரிய அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. 

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். வழக்கமாக கோடைக்காலத்தில் மட்டுமே காணப்படும் மின் தட்டுப்பாடு, தற்போது இலையுதிர் காலத்திலும் நீடிப்பதற்கு மின்சார தேவை கணிசமாக உயர்ந்ததே முக்கிய காரணம். எல் நினோ தாக்கத்தால் இரவு நேரங்களில் கூட சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் கோடைக்கால வெப்பம் நிலவுவதால் குளிரூட்டிகள் அதிகமாக இயக்கப்படுகின்றன. 

இதனால் மின் நுகர்வு முந்தைய ஆண்டை விட உயர்ந்துள்ளது. சென்னை, தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் இரவு நேர மின்வெட்டு அதிகரித்துள்ளது. இரண்டு மணி நேர அறிவிக்கப்படாத வெட்டுக்களால் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். தூக்கமிழந்த மக்கள் சாலை மறியல், மின்வாரிய அலுவலக முற்றுகை போன்ற போராட்டங்களில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. 

சென்னையில் மின் உற்பத்தி பற்றாக்குறை மற்றும் விநியோக வலையமைப்பில் அதிக சுமை ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.கடந்த 19ஆம் தேதி 19,283 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. நேற்று தேவை 15,260 மெகாவாட்டாக குறைந்தபோதிலும் வெட்டு தொடர்ந்தது. அரசுக்கு சொந்தமான நிலையங்களுடன் வெளி மாநிலங்களில் இருந்து 2,000 மெகாவாட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரிய வழக்கு! 4 வாரங்களில் அறிக்கை தர தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

மத்திய தொகுப்பில் இருந்து 4,429 மெகாவாட், சூரிய ஆற்றல் மூலம் 1,257 மெகாவாட், காற்றாலைகள் மூலம் 742 மெகாவாட், அனல் மின் நிலையங்கள் மூலம் 2,118 மெகாவாட், நீர் மின் நிலையங்கள் மூலம் 562 மெகாவாட், வாயு மூலம் 179 மெகாவாட் மற்றும் பிற மரபுசாரா ஆதாரங்களில் இருந்து 138 மெகாவாட் கிடைக்கிறது.மாநில அனல் மின் நிலையங்கள் நிறுவப்பட்ட திறனுக்குக் குறைவாகவே உற்பத்தி செய்கின்றன. 

வடசென்னை சூப்பர் கிரிட்டிகல் நிலையத்தின் மூன்றாம் கட்டம் 46 சதவீதமும், இரண்டாம் கட்ட அலகுகள் முறையே 42 மற்றும் 46 சதவீதமும் மட்டுமே உற்பத்தி செய்துள்ளன. சில நிலையங்கள் வருடாந்திர பராமரிப்பில் இருப்பதால் முழு திறன் பயன்படுத்த முடியவில்லை. அதிக ஈரப்பதமும் வெப்பமும் நுகர்வை உயர்த்தியுள்ள நிலையில், காற்றாலை உற்பத்தி குறைவு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள், காலநிலை மாற்றத்துடன் அடுத்த மாத தொடக்கத்தில் நிலைமை சீரடையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போதைய பராமரிப்புப் பணிகள் அடுத்த கோடைக்காலத் தேவையை எதிர்கொள்ள உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 

இதையும் படிங்க: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share