பியூஸ் கேரியர் திருட்டு.. ஆவடி மக்கள் அவதி..! வைரலாகும் CCTV காட்சிகள்..!!
ஆவடியில் பியூஸ் கேரியர்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள புதைவட மின்சார கேபிள் பெட்டியில் இருந்து 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு காரணமாக அப்பகுதியில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புழல் பகுதியைச் சேர்ந்த வினித் மற்றும் தினேஷ் ஆகிய இருவரே இந்த திருட்டில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட இருவரும் திருடிய 14 பியூஸ் கேரியர்களை செங்குன்றம் அருகே உள்ள ஒருவருக்கு 1,500 ரூபாய்க்கு விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே மேலும் 3 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மொத்தம் 17 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பியூஸ் கேரியர்கள் மின்சார அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பவை. அவை திருடப்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல மணி நேரம் மின்வெட்டு நீடித்தது. இந்த சம்பவம் ஆவடி பகுதி மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்சாரத்தை மீட்டமைத்தனர்.
இதையும் படிங்க: சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்... பெரும் தலைவலியாக மாறிய `பவர் கட்’ ... மின்வாரியம் எடுத்த அதிரடி முடிவு...!
கைது செய்யப்பட்ட இருவரும் மீது ஏற்கனவே வாகன திருட்டு மற்றும் இரும்புப் பொருட்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் இத்தகைய திருட்டு சம்பவங்கள் தொடர்வதால் அடிக்கடி மின்வெட்டுக்கு ஆளாவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். மின்வாரிய அதிகாரிகளும், காவல்துறையினரும் இணைந்து இத்தகைய சம்பவங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் இருக்குற ஏரியாவுலேயே இப்படியா?... பிள்ளை குட்டிகளோடு நடுத்தெருவுக்கு வந்த மக்கள்... பரபரப்பான இசிஆர்...!