பரபரக்கும் தேர்தல் களம்: முரண்டு பிடிக்கும் அண்ணாமலை..!! கூட்டத்தில் பங்கேற்க அழைக்கும் பாஜக..!!
முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து தாமதம் நீடித்து வருகிறது. இதனால் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக போட்டியிடத் திட்டமிட்டுள்ள 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என்பது குறித்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே பல்வேறு பெயர்கள் சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற நிலை பாஜகவில் இதுவரை காணப்படாத ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தலைமைக்கு தகவல்கள் சென்றுள்ளதாகவும், வேட்பாளர் தேர்வில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பதை ஆராய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார்.
அப்போது அவர் ஒரு உத்தேச வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து டெல்லிக்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் இந்த பட்டியல் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி பட்டியலை எடுத்துக் கொண்டு பியூஷ் கோயல் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை சென்னைக்கு வருகிறார். மாநில நிர்வாகிகளிடம் இந்தப் பட்டியலைப் பகிர்ந்து கொண்டு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!
மாநிலத் தலைமை மாற்றங்கள் வலியுறுத்தினால், பட்டியல் இன்று இரவு அல்லது நாளை வெளியாகும் வாய்ப்பு உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரி வருகிறார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பின்னர், ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாலை 4.15 மணிக்கு வந்து சேருகிறார்.
அங்கிருந்து திறந்த வாகனத்தில் ‘ரோடு ஷோ’ நடத்தி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். அஜந்தா சிக்னல் சந்திப்பில் தொடங்கும் இந்த ரோடு ஷோ, ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெறும். ரோடு ஷோ முடிந்ததும் மாலை 5.50 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னைக்குத் திரும்பி, அங்கு தங்குகிறார். நாளை (சனிக்கிழமை) சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடம் வலியுறுத்துவதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. எனினும், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அவரது பங்கேற்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?