×
 

"அணுமின் நிலையங்களை தனியார் மயமாக்கினால் கேன்சர் பரவும்" - சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை!

அணுசக்தி நிலையங்களைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் எனச் சபாநாயகர் அப்பாவு எச்சரித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒன்றிய அரசின் அண்மைக்கால முடிவுகள் மற்றும் ஆளுநர் விவகாரம் குறித்து அடுக்கடுக்கான ‘பகீர்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக உழைக்கும் மக்களின் நலனை மத்திய அரசு அடகு வைப்பதாக அவர் சாடினார்.

செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, "100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியிருப்பது, 77 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காந்தியைப் படுகொலை செய்வதற்குச் சமம் என்று முன்னாள் அமைச்சர் சிதம்பரம் கூறியிருப்பதை நான் வழிமொழிகிறேன். காங்கிரஸ் மற்றும் திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால், 42 கோடி மக்கள் பயன்பெறும் இந்தத் திட்டத்தைப் புறக்கணிப்பது நியாயமில்லை. 10 ஆயிரம் கோடி கிடைக்க வேண்டிய இடத்தில் 6 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. அதுமட்டுமல்லாமல், அணுசக்தி நிலையங்களின் பராமரிப்பைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவு மிகவும் ஆபத்தானது. கூடன்குளம் பகுதியில் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், தனியார் வசம் சென்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி, நாடு முழுவதும் புற்றுநோய் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.

தமிழக ஆளுநர் குறித்துப் பேசிய அவர், "சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு ஆளுநரைச் சந்தித்து முறைப்படி அழைப்பு விடுப்போம். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் எப்படி அரசுக்கு ஒத்துழைக்கிறார்களோ, அதுபோல் இங்கும் அவர் செயல்படுவார் என்றும், நாங்கள் கொடுக்கும் உரையை அப்படியே முழுமையாகப் படிப்பார் என்றும் நம்புகிறோம். பாஜக அல்லாத மாநிலங்களுக்குக் கல்வி நிதி வழங்காமல் நெருக்கடி கொடுக்கும் ஒன்றிய அரசு, பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புகுத்தத் துடிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒன்றிய அரசுக்குச் சாதகமாக 50 வாக்குகள் விழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் உள்ளன. இதற்கான ஆதாரங்களை அளித்தால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது" என்று  குற்றம் சாட்டினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியைக் குறைத்துவிட்டு, சாதாரண மக்களிடம் வரி வசூலிப்பதையும், ரயில்வே கட்டணத்தை உயர்த்துவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள மத்திய அரசு, தீக்கொளுத்தும் வேலையைத் தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.
 

இதையும் படிங்க: ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

இதையும் படிங்க: RSS பாதையில் மத்திய அரசு…மாநில உரிமைகள் பறிப்பு… வீரமணி கடும் விமர்சனம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share