×
 
☰

ஆவின் பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தம் என்பது வதந்தி: ஆவின் நிர்வாகம் மறுப்பு!

ஆவின் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பனீர், வெண்ணெய், நெய், குக்கீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், உண்மைக்குப் புறம்பானவை என்றும் ஆவின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில், ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாகவோ அல்லது தற்காலிகமாகவோ நிறுத்தப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல் தடையின்றித் தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் சீராக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது ஆவின் நிறுவனம் 175-க்கும் மேற்பட்ட வகையான பால் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருட்களைத் தயாரித்து நுகர்வோரின் தேவைக்கேற்ப விற்பனை செய்து வருகிறது. சென்னையில் உள்ள சுமார் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாகப் பொதுமக்களுக்கு இவை நேரடியாகச் சென்றடைகின்றன. மேலும், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ₹1 சாக்லேட் மற்றும் பால் ரஸ்க் ஆகிய புதிய பொருட்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அவற்றின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சர்ப்ரைஸ் விசிட்! சொந்த தொகுதியில் மக்களுடன் சந்திப்பு!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் தயிர், லஸ்ஸி மற்றும் பனீர் உள்ளிட்ட முக்கியப் பொருட்களின் விற்பனை சுமார் 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் ஆவின் பொருட்களுக்கு உள்ள நன்மதிப்பைப் பிரதிபலிக்கிறது. மேலும், வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்பு வகைகள் முழுவீச்சில் தயாரிக்கப்பட்டு, நுகர்வோரின் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எனவே, உற்பத்தி நிறுத்தம் குறித்த தவறான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், தரமான பால் பொருட்களைத் தொடர்ந்து வழங்க ஆவின் நிர்வாகம் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் கலந்து கொண்ட ஆவின் ஆய்வக திறப்பு விழாவில் எழுத்துப்பிழை!! பலகையை பார்த்து அதிர்ந்த மக்கள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share