×
 

5வது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்... குவிந்து கிடக்கும் குப்பைகளால் மக்கள் அவதி!

ஐந்தாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் குப்பைகள் குவிந்துள்ளன.

சென்னை மாநகராட்சியில் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள், நகரின் தூய்மையைப் பராமரிக்கும் முக்கியப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல், பாதாள சாக்கடைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்கின்றனர்.

இருப்பினும், இவர்களின் பணி நிலைமைகள், ஊதியம், மற்றும் பணி பாதுகாப்பு ஆகியவை நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: எங்க புள்ள எப்படி செத்தான்? மாணவன் முகிலன் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம்

 குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்து வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது, நிரந்தரப் பணி வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஆகியவற்றை வலியுறுத்தி ரிப்பன் மாளிகை முன்பு ஐந்தாவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்கள், சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை முன்பு ஒன்று கூடி, கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் பங்கேற்றுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை உறுதியான தீர்வு எட்டப்படவில்லை.

பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது. குறிப்பாக, சென்னை எழும்பூரில் உள்ள பல பகுதிகளில் குப்பைகள் தேங்கியுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

சாலைகளில் குவியல் குவியலாக குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் சாலையில் நடக்க முடியாத சூழல் ஏற்படுவதாகவும் அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குப்பைகள் தேங்கியுள்ளதால் எலிகள் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும், குப்பைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: தடையை மீறிய சீமான்... வனப்பகுதிக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர்! திக்குமுக்காடிய வனத்துறை

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share