×
 

பிரபல ஆலையில் தொழிலாளி உயிரிழப்பு; விடிய விடிய வெடித்தது போராட்டம்... போலீசாருடன் தள்ளுமுள்ளு...!

மதுரை ராம்ராஜ் காட்டன் தொழிற்சாலையில் தொழிலாளி மரணம்  இழப்பீடு கோரி போராட்டம் போலீசாருடன் வாக்குவாதம் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு காட்சிகள்

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடி பகுதியில் அமைந்துள்ள பிரபல ராம்ராஜ் காட்டன் ஆடைத் தொழிற்சாலையில், உயிரிழந்த சுமை தூக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி நடைபெற்ற போராட்டத்தில், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

​கோவில் பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். கண்ணன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

​வழக்கம் போல் இன்று மாலை பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன், எதிர்பாராத விதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "85% வேட்பாளர்கள் இறுதி!" – நாளை வெளியாகிறது தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!

​கண்ணனின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது உடலை ஆலை வாசலில் வைத்து உறவினர்களும் சக தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணியில் இருந்தபோது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என அவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும், "நீங்கள் தினசரி கூலித் தொழிலாளி (Daily Wager) என்பதால், நிர்வாக ரீதியாக இழப்பீடு வழங்க முடியாது" என ராம்ராஜ் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

 இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் குதித்தனர். ​தகவலறிந்து வந்த சமயநல்லூர் டி.எஸ்.பி ஆனந்தராஜ் மற்றும் அலங்காநல்லூர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், டி.எஸ்.பி உத்தரவின் பேரில் காவல்துறையினர் உடலை வலுக்கட்டாயமாக அகற்ற முயன்றனர்.

​அப்போது அங்கிருந்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதில் சிலரை காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

​இந்தச் சூழலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பொன்னுத்தாய் மற்றும் CITU நிர்வாகிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வந்தனர்.  கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், நிர்வாகத்தைக் கண்டித்தும் அவர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

இருப்பினும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை" என உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: அடுத்த மே எங்க ஆட்சி தான்... அடித்துச் சொன்ன சி.டி.ஆர். நிர்மல்குமார்... அரசு அதிகாரிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share