எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு! பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
சென்னையில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முக்கியக் கட்டுமானப் பணிகளைப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தலைநகர் சென்னையில் கல்வி, மருத்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த பல புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தப் பணிகள் தரமாகவும், குறித்த காலத்திற்குள்ளும் முடிவடைவதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் எ.வ. வேலு இன்று கள ஆய்வில் ஈடுபட்டார். குறிப்பாக, எழும்பூர் மற்றும் மாநிலக் கல்லூரி வளாகங்களில் நடைபெற்று வரும் இறுதிக்கட்டப் பணிகளை ஆய்வு செய்த அவர், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாகக் கொண்டு வர அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
அமைச்சர் எ.வ. வேலு தனது ஆய்வினை முதலில் எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் தொடங்கினார். அங்குள்ள கன்னிமாரா பொது நூலகத்தின் அருகே புதிதாக நிறுவப்பட உள்ள 9 அடி உயர மாமேதை காரல் மார்க்ஸ் சிலையின் பீடம் மற்றும் பீடத்தைச் சுற்றியுள்ள பணிகளை அவர் விரிவாக ஆய்வு செய்தார். பின்னர் நூலகத்திற்குள் சென்ற அமைச்சர், ஊழியர்களிடம் தினசரி வருகை தரும் வாசகர்களின் எண்ணிக்கை மற்றும் விடுமுறை நாட்களில் நூலகப் பயன்பாடு குறித்த விபரங்களைக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் அதிநவீன உயர்தர சிறப்புச் சிகிச்சை மையக் கட்டிடத்தை அமைச்சர் பார்வையிட்டார். மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான இடவசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்த அவர், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்துத் திறப்பு விழாவிற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தினார். இறுதியாகச் சென்னை மாநிலக் கல்லூரிக்குச் சென்ற அமைச்சர், அங்குப் பணி நிறைவுற்றுத் திறப்பு விழாவிற்குத் தயாராக உள்ள 'முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கத்தை' நேரில் பார்வையிட்டார். அரங்கத்தின் முகப்புத் தோற்றம், உட்புற வசதிகள் மற்றும் மின்சாரப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்த அவர், சிறு குறைகளும் இன்றி பணிகளை முழுமையாக முடிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நூலிழையில் தப்பிய 192 பயணிகள்! ஓடுபாதையிலேயே நின்ற ஸ்பைஸ்ஜெட் விமானம்!
இதையும் படிங்க: “இரட்டை அடுக்கு மேம்பாலத்தில் மெட்ரோ!” போரூர் - வடபழனி மெட்ரோ சோதனை ஓட்டம் வெற்றி!