×
 
☰

தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!

புதுக்கோட்டை மேட்டுப்பட்டியில் 6 மாத கர்ப்பிணிப் பெண் கழுத்தை நெரித்து படுகொலை: மாமியார் உட்பட 6 பேர் கைது – காவல் துறை அதிரடி 

புதுக்கோட்டை மேட்டுப்பட்டி பகுதியில் 6 மாத கர்ப்பிணிப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம், தற்போது கொடூரக் கொலையாக மாறியுள்ளது. இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் மாமியார் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
​
புதுக்கோட்டை மேட்டுப்பட்டி அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவரின் மனைவி சந்தியா (21). 6 மாத கர்ப்பிணியான இவர், கடந்த செப்டம்பர் 30ம் தேதி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த கணேஷ் நகர் காவல்துறையினர், சந்தியாவின் உடலைக் கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கப்பதிவு செய்து  விசாரணையைத் தொடங்கினர்.
​
மருத்துவர்கள் நடத்திய பிரேத பரிசோதனையில், சந்தியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவ ஆலோசனையின் பேரில் கணேஷ் நகர் காவல்துறையினர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 8 பேரை தீவிர விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
​
காவல்துறையினரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. உயிரிழந்த சந்தியா, தனது கணவரின் சகோதரி பாண்டி மீனா மற்றும் உறவினர் கனிமொழி ஆகியோரின் தகாத உறவு குறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனால் சந்தியா மீது ஆத்திரமடைந்த உறவினர்கள், அவருக்கு எதிராக முன்விரோதத்தை வளர்த்து வந்துள்ளனர்.
​இதன் காரணமாக, கணவர் மற்றும் மாமனாரைத் தவிர்த்து, மற்ற 6 உறவினர்களும் ஒன்று சேர்ந்து சந்தியாவைத் துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும், தலையணையால் முகத்தை அழுத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.
​
இதனைத் தொடர்ந்து, சந்தேக மரணம் எனப் பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்த காவல்துறையினர், கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய மாமியார் ​பானுமதி (46), நாத்தனார் ​பாண்டி மீனா (33) மற்றும் ​பொற்கொடி (29), மாமனாரின் தங்கை செல்வி (38) மாமனாரின் தங்கையின் மகன் ​கார்த்தி (24), கணவரின் அத்தை ​கனிமொழி (27) ​ஆகிய 6 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

​கர்ப்பிணிப் பெண் தகாத உறவைக் தட்டிக் கேட்டதால், மாமியார் குடும்பத்தினரே திட்டமிட்டுப் படுகொலை செய்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share