லீக்கானதா குரூப் 4 தேர்வு வினாத்தாள்..? டிஎன்பிஎஸ்சி விளக்கம்..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப் 4, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
முன்னதாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் போட்டித் தேர்வுகளில் பயன்படுத்தப்படும் ஓஎம்ஆர் (OMR - Optical Mark Recognition) விடைத்தாளில் கடந்த ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த மாதம் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டது. இந்த மாற்றங்கள் வரவிருக்கும் தேர்வுகளுக்கு பொருந்தும், மேலும் விண்ணப்பதாரர்கள் புதிய வடிவமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வரும் 12ம் தேதி குரூப் 4 தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு..!
கடந்த காலங்களில் தேர்வு எழுதி முடிந்ததும் எத்தனை வினாக்களுக்கு விடை அளித்துள்ளோம், எந்தெந்த கேட்டகிரி (A, B, C, D)-யில் விடைகள் அளிக்கப்பட்டது என்பது பூர்த்தி செய்ய வேண்டி இருக்கும். தற்போதுள்ள OMR தாளில் கேட்டகிரி வாயிலாக பதில்களின் விவரங்களை பூர்த்தி செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பிரிவில் 3935 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை பெறப்பட்டன. இதில் லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக எழுத்து தேர்வு ஜூலை 12 ஆம் தேதி காலை 9.30க்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
ஜூலை 12ம் தேதியான நாளை குரூப் 4 போட்டி தேர்வு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் கடந்த 2ம் தேதி வெளியானது. நாளை 38 மாவட்டங்களிலும் 314 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. 5 லட்சத்து 26 ஆயிரத்து 553 ஆண்கள், 8 லட்சத்து 63 ஆயிரத்து 68 பெண்கள், 117 மூன்றாம் பாலினத்தவர் என ஒட்டுமொத்தமாக 13 லட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் தேர்வை எழுதுகின்றனர். தலைநகர் சென்னையில் பொறுத்த வரை 311 இடங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் 94 ஆயிரத்து 848 பேர் பங்கேற்கின்றனர். மேலும் தேர்வு பணியில் 4,500 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுகின்றனர். இதையொட்டி தேர்வு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றன. இந்த முறை வினாத்தாள்கள் தனியார் பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமாக அரசு தேர்வின் போது வினாத்தாள்கள் கண்டெய்னர் போன்ற மூடப்பட்ட வாகனங்களில் எடுத்து செல்லப்படும். ஆனால் இந்த முறை தனியார் பேருந்துகளில் வினாத்தாள்கள் எடுத்து செல்லப்பட்டது. இதனால் வினாத்தாள் கசிய வாய்ப்பு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இது தேர்வர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை; தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தனியார் பேருந்துகள் மூலம் வினாத்தாளை எடுத்து சென்றது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி எழுதுபவர்களின் கவனத்திற்கு.. OMR தாள்களில் புதிய மாற்றம்..!