×
 

"மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடா?"... பிகார் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!

பிகாரில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக பிகாரில் நடைபெற்ற மாணவர் போராட்டம் அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. போராட்டத்தின் போது மாணவர்கள் மீது காவல்துறையினர் ஏகே-47 ரக ஆயுதத்தை பயன்படுத்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை, பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் மாணவர் அமைப்புகள் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தின. பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஏகே-47 ரக ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்களை பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க: “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

இந்த நிலையில், ராகுல் காந்தி தனது எக்ஸ் (X) சமூக வலைதள பதிவில், மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் ஒட்டுமொத்த அமைப்பும் மாணவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏகே-47 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படாது என்று முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதி என்ன ஆனது என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மாணவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது பிகாரில் ஏகே-47 பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியாக, பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பும் மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: ராகுல்காந்தியின் பிரதமர் கனவுக்காக களமிறங்கும் காங்கிரஸ்... மாவட்ட தலைவர்களுக்கு 10 நாள் பயிற்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share