ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு உறுதி?! I.N.D.I.A கூட்டணியில் இணைகிறது தவெக? புதிய அரசியல் கணக்கு!
முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில், ராகுல் பங்கேற்றார். தமிழக முதல்வராக டெல்லி சென்ற விஜய், ராகுல் வீட்டில் விருந்து சாப்பிட்டார். அதன்பின், இருவருக்குள்ளும் பரஸ்பர நட்பு உருவாகியுள்ளது.
தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகள் உருவாகும் சூழல் நிலவி வரும் நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய் இடையிலான சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, தமிழக வெற்றிக் கழகத்தை இண்டி கூட்டணியில் இணைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சில எம்.பி.க்கள், பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு, காங்கிரஸ் கட்சி 'மிஷன் 2029' என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 1! முதல்வர் விஜய் உடன் ராகுல்காந்தி சந்திப்பு?! அரசியல் வட்டாரத்தில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு!
இந்த முகாமின் நிறைவு விழாவில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். அவரது சென்னை வருகையின்போது பல முக்கிய அரசியல் சந்திப்புகள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி கலந்து கொண்டதுடன், பின்னர் டெல்லி சென்ற விஜய், ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்தித்து விருந்திலும் பங்கேற்றார். அதன் பின்னர் இரு தலைவர்களுக்கும் நல்ல அரசியல் புரிதலும் நட்பும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நீட் தொடர்பான மாணவர் போராட்டத்தில் ராகுல் கைது செய்யப்பட்டபோது, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட ஆதரவு அறிக்கையும் இரு தரப்புக்கும் இடையிலான நெருக்கத்தை வெளிப்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் சென்னை வருகையின்போது முதல்வர் விஜயை அவர் சந்தித்தால், அது தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அரசியலிலும் புதிய விவாதத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2029 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இரு கட்சிகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஒருங்கிணைப்பு அமைப்பு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இண்டி கூட்டணியில் இணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுகுறித்து காங்கிரஸ் அல்லது தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இந்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன. ராகுல் காந்தியின் சென்னை பயணம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள சந்திப்புகள், தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகளை தீர்மானிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "மாணவர்கள் மீது ஏகே-47 துப்பாக்கிச் சூடா?"... பிகார் சம்பவத்துக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்!