100 ஆண்டுகள் காணாத பேய்மழை.. 100-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்த டெக்சாஸ் வெள்ளம்..!
அமெரிக்கா டெக்ஸாசில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த 4ம் தேதி வரலாறு காணாத மழை பெய்தது. சில மாதங்கள் வரை பெய்ய வேண்டிய மழை சில மணி நேரங்களில் பெய்து தீர்த்ததாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்தது. அதுவும் கடந்த 100 ஆண்டுகளில் டெக்சாஸ் மாகாணம் பார்த்திராத மழையாம்.
குறிப்பாக கடந்த 3ம் தேதி இரவு முதல் 4ம் தேதி அதிகாலை வரை 28 செ.மீ கனமழை கொட்டி தீர்த்தது. பேய் மழையால் குவாடலூப் ஆற்றின் நீரின் அளவு 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கின.
குவாடலூப் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஊர்களுக்குள் புகுந்து பல இடங்களில் சேதத்தை விளைவித்தது. குறிப்பாக Kerr County கெர் கவுன்டி பகுதியில் மழை வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பஞ்சாபில் 16 பயங்கரவாத தாக்குதல்.. அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி..!
இந்த மழைக்கு இதுவரை 100 பேர் இறந்துள்ளனர். கெர் கவுன்டியில் மட்டும் 28 குழந்தைகள் உள்பட 68 பேர் பலியாகி உள்ளனர். 41 பேரை காணவில்லை வெள்ளத்தில் மாயமான 10 சிறுவர்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பாலங்கள், சாலைகள் மற்றும் 12,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள், படகுகள், ட்ரோன்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை வெள்ளத்தால் பாதித்தவர்கள் 850க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காணாமல் போனவரை தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இது ஒரு அசாதாரண பேரழிவு. வௌ்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும் என டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் தெரிவித்தார். மேலும் கவர்னர் கிரெக் அபோட், அவசர நிலையை அறிவித்து, மீட்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இந்த துயர சம்பவத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய பேரிடராக அறிவித்துள்ளார். டெக்சாஸ் பேரிடரில் பாதித்தவர்களுக்கு அனைத்து வகையிலும் அமெரிக்க அரசு உதவும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார். விரைவில் அவர் டெக்சாஸ் வந்து பாதித்த இடங்களை ஆய்வு செயகிறார். தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: பிரிக்ஸ் நாடுகளை பழிவாங்கும் அமெரிக்கா! ட்ரம்ப் ஆட்டத்திற்கு சீனா கொடுத்த பதிலடி!!