காவிரி இணைப்பு திட்டம் நடக்கும் போது ரஜினிகாந்த் நிதி வழங்குவார்! லதா ரஜினிகாந்த் பேட்டி!
காவிரி இணைப்புத் திட்டம் தொடங்கப்படும் போது ரஜினிகாந்த் நிச்சயம் நிதி வழங்குவார் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் எந்த நிமிடத்தில் தொடங்கப்படுகிறதோ, அந்த வேளையில் நடிகர் ரஜினிகாந்த் தான் அறிவித்த நிதியை நிச்சயம் வழங்குவார் என்றும், 'மக்கள் மேடை' தளம் மக்களின் குறைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் பாலமாகச் செயல்படும் என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் 'ஶ்ரீ தயா' அறக்கட்டளையின் சார்பில் 'மக்கள் மேடை' அமைப்பின் 'பாரத சேவா' புதிய இணையதள தொடக்க விழா நடைபெற்றது. இவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு சமூக நலத் திட்டங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் பயனடையும் வகையில் இந்த புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
எங்களது இந்தச் சமூக சேவைப் பயணம் 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டப்பட்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான புதிய கல்வி முறையைத் தொடங்கியுள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும். நாட்டுப்பற்றே எல்லாவற்றையும் விடப் பெரியது.
இதையும் படிங்க: "பசிக்கும்-ல"..! "ரீல்ஸ் போட்ட மனைவி"..! சோறு போடாததால் போட்டுத் தள்ளிய கணவன் கைது.!
காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக 2002-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த லதா ரஜினிகாந்த், "இது ஒரு அரசியல் சார்ந்த கேள்வி. காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் சாத்தியமாகி நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் தனது நிதியை 100 சதவீதம் கண்டிப்பாகக் கொடுப்பார். எங்களுக்கு அவரின் ஆதரவை விட ஆசீர்வாதமே முக்கியமானது, எனத் தெரிவித்தார்.
மக்கள் பிரச்சனையும் அரசாங்கத்தின் பிரச்சனையும் வேறு வேறல்ல, இரண்டும் ஒன்றுதான். பொதுமக்களின் பிரச்சனைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை வரும்போது, அதை நிச்சயம் அரசின் பார்வைக்குக் கொண்டு சேர்ப்போம், என்றார்.
பல ஆண்டுகளாகத் தாங்கள் செய்து வரும் சமூக நலப் பணிகளை அதிக அளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே இந்த 'மக்கள் மேடை' இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக லதா ரஜினிகாந்த் தனது பேட்டியில் நிறைவாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் முடங்கிய பத்திரப்பதிவு பணிகள்... ஆவணங்களுடன் காத்திருப்பு..! மக்கள் அவதி..!