#BREAKING ராஜ்யசபா வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்... யார் இந்த கிறிஸ்டோபர் திலக்?
தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் ராஜ்ய சபா வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் திமுக இடையேயான பேச்சு வார்த்தையில் தொடர்ந்து தாமதம் மற்றும் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் நிலவி வந்த நிலையில் நேற்றிரவு கூட்டணியானது இறுதியானது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர். மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மாநிலங்களவையில் மொத்தம் 18 இடங்கள் உள்ளன. அதில் என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதிமுகவில் 2, திமுகவில் 4 என காலியாகும் மொத்தம் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மார்ச் 5 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் தம்பிதுரை மீண்டும் ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BIG BREAKING தலைகீழ் திருப்பம்... கையெழுத்தானது திமுக - காங்கிரஸ் ஒப்பந்தம்... எவ்வளவு தொகுதிகள்?
தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தலில் திமுக தரப்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு காங்கிரஸுக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சி சார்பில் கிறிஸ்டோபர் திலக் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டோபர் திலக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவியில் உள்ளார். மணிப்பூர், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக செயல்பட்டவர். செல்வப்பெருந்தகையின் பரிந்துரையின் பேரில் கிறிஸ்டோபர் திலக்கிற்கு தலைமை சீட்டை ஒதுக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தேர்தல் குழு, சொத்து பாதுகாப்பு குழு போன்ற பதவிகளை வகுத்துள்ளார். மணிப்பூரில் கலவரம் வெடித்த போது தமிழகத்தில் போராட்டங்களை ஒருங்கிணைத்தது, மணிப்பூரில் பயிலும் தமிழக மாணவர்களை பாதுகாப்பது, மணிப்பூர் எல்லை பாதுகாப்பு, மணிப்பூர் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னிலை வகுத்துள்ளார்.
சமீபத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய போது அதற்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை ஒருங்கிணைத்தவர் கிறிஸ்டோபர் திலக் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி? பரபரப்புக்கு மத்தியில் டெல்லியில் இருந்து கசிந்த தகவல்..!!