தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜிக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இன்று பிறை தென்படவில்லை என்பதால் சனிக்கிழமை ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதம் முடிவடைந்து ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை இன்று தென்படாததால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21, சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை (ஈகைத் திருநாள்) கொண்டாடப்படும் எனத் தலைமை ஹாஜிக்கள் அறிவித்துள்ளனர்.
"தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்று (வியாழக்கிழமை) ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படவில்லை. எனவே, நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 20) ரமலான் மாதத்தின் 30-வது நோன்பு பூர்த்தியாகும். அதனைத் தொடர்ந்து, மார்ச் 21, சனிக்கிழமை அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்" எனத் தமிழக அரசின் தலைமை ஹாஜி முப்தி உஸ்மான் முஹ்யிதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதேபோல், புதுச்சேரியிலும் இன்று பிறை தென்படாததால், வரும் மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனப் புதுச்சேரி மாநிலத் தலைமை ஹாஜி இசூதீன் பாகவி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை காலை சென்னை தீவுத்திடல், காயல் பட்டினம், திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள மசூதிகள் மற்றும் ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெறும்.
ஏற்கனவே மார்ச் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரம்ஜான் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சனிக்கிழமை பண்டிகை கொண்டாடப்படுவதால், அரசு விடுமுறை தேதியில் மாற்றம் செய்யப்படுமா அல்லது சனிக்கிழமை கூடுதல் விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!