×
 

பெருவயல் ரெணபலி முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பெருவயல் அருள்மிகு ரெணபலி முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்ட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பெருவயல் அருள்மிகு ரெணபலி முருகன் திருக்கோவிலில் திருப்பணிகள் நிறைவடைந்து, இன்று அதிகாலை வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் பக்திப் பரவசத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சேதுபதி மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு, ஆன்மீகச் சிறப்பு மிக்க தலமாக விளங்கும் பெருவயல் ரெணபலி முருகன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி கணபதி ஹோமம் மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து நான்கு நாட்களாக யாகசாலையில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை முழங்க, விசேஷ திரவிய ஹோமங்களும் பூர்ணாஹுதி தீபாராதனைகளும் விமரிசையாக நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து விழாவின் சிகர நாளான இன்று அதிகாலை யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்களுடன் புனித நீர் அடங்கிய திருக்குடங்களைச் சுமந்து கொண்டு ஆலய விமானத்தை அடைந்தனர். சரியாக அதிகாலை 5:30 மணி முதல் 6:30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடத்தி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அமெரிக்க மியாமியில் சரக்கு விமானம் விபத்து! சாலையில் பாய்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் பலி!

அப்போது கூடி நின்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி முழக்கம் விண்ணைப் பிளந்தது. தொடர்ந்து மூலவருக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் சிறப்பு மகா அபிஷேகமும் ஆராதனைகளும் நடைபெற்றன. இவ்விழாவில் பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி கலந்துகொண்டு கும்பாபிஷேக நிகழ்வுகளைத் தனது பாணியில் பக்தி மணம் கமழ வர்ணனை செய்தார்.

இப்புனிதப் பெருவிழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரச குடும்பத்தைச் சேர்ந்த ராணி ராஜேஸ்வரி நாச்சியார், அபர்ணா தேவி, சரண்குமார், அஸ்மிதா ராணி உள்ளிட்ட அரச குடும்பத்தினரும், தேவஸ்தான அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆன்மீகப் பெரியோர்கள், பொதுமக்கள் எனத் திரளானோர் பங்கேற்று முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றனர்.

முன்னதாக, ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்கள் ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் ஆற்றிய திருப்பணிகள் அளப்பரியவை. சேதுபதி மன்னரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், கடலுக்குள் வேல் ஒன்று இருப்பதாகவும், அதை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறும் அருள்பாலித்தார். அதன்படி மன்னர் கடலில் மூழ்கித் தேடிய போது கண்டெடுக்கப்பட்ட அந்தப் புனித வேலானது பெருவயல் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலிலும், ராமநாதபுரம் பெருவயல் ரெணபலி முருகன் ஆலயத்திலும் ஒரே மாதிரியான பூஜை முறைகளும் ஆன்மீக வழிபாட்டு மரபுகளும் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவது இத்தலத்தின் தனிப்பெரும் சிறப்பாகும்.

இதையும் படிங்க: கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share