இளவரசர் வரும் வரை வாடிவாசல் திறக்கக் கூடாதா? உதயநிதியை சீண்டிய ஆர்.பி. உதயகுமார்!
ஜல்லிக்கட்டைத் திமுகவின் குடும்ப விழாவாக மாற்ற முயற்சிப்பதாக ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மன்னராட்சி காலம் முதல் மக்களாட்சி காலம் வரை மக்களின் விழாவாக இருந்த ஜல்லிக்கட்டு, இப்போது திமுகவின் குடும்ப விழாவாக மாற்றப்பட்டு வருகிறது எனச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று வழக்கமான நேரத்தைத் தாண்டித் தாமதமாகத் தொடங்கப்பட்டதற்குச் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம், சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளில் 'எடப்பாடியார் பொங்கல்' விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில், சோழவந்தான் தொகுதி தனிச்சியத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
மன்னராட்சி காலம் முதல் மக்களாட்சி காலம் வரை ஜல்லிக்கட்டு என்பது மக்களின் விழாவாகவே இருந்து வந்த நிலையில், இப்போது அது திமுகவின் குடும்ப விழாவாக மாற்றப்பட்டு வருவதாக ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டினார். மரபுப்படி காலை 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டு காலை 9:30 மணிக்கு மேல் தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதனால் அதிகாலையிலிருந்தே வாடிவாசலில் காத்திருந்த மாடுபிடி வீரர்கள், காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மிகுந்த வேதனைக்குள்ளானதாக அவர் கூறினார். "இளவரசர் வரும் வரை மக்கள் காத்திருக்க வேண்டுமா? ஜல்லிக்கட்டு என்பது நாட்டின் சொத்து, அதை வீட்டின் சொத்தாக மாற்ற முயற்சிக்கக் கூடாது" என்று அவர் மிகக் காட்டமாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: அலங்காநல்லூரிலும் என் காளை சீறும்! டிராக்டர் வென்ற உற்சாகத்தில் காளை உரிமையாளர் விருமாண்டி!
தொடர்ந்து பேசிய அவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது காளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அளித்த வாக்குறுதி, ஆட்சி முடிவடையப் போகும் நிலையிலும் நிறைவேற்றப்படவில்லை எனச் சாடினார். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும், காளை வளர்ப்போருக்கும் கார் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியது அதிமுக அரசுதான் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் போது, ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசியல் குறுக்கீடுகள் இன்றி கிராமக் கமிட்டிகள் மூலம் மரபுப்படி சிறப்பாக நடத்தப்படும் என்றும், ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த அதிமுகவின் சாதனைகளை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும் ஆர்.பி. உதயகுமார் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: 22 காளைகள்.. ஒரு பாலமுருகன்! அவனியாபுரத்தில் சீறிப்பாய்ந்து காரை தட்டி சென்ற ஒற்றைச் சிங்கம்!