வாசிப்புதான் தமிழ்நாட்டின் அடையாளம்! பாளையங்கோட்டை சிறைக்கு 5,000 புத்தகங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்!
வாசிப்பு பெருகினால் தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கும் எனக் குறிப்பிட்டு பாளையங்கோட்டை சிறைவாசிகளுக்கும் தாம்பரம் நூலகத்திற்கும் 5000 புத்தகங்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
வாசிப்பு இயக்கம் பெருகினால் மட்டுமே தமிழ்நாடு தன் சுய அடையாளத்தை இழக்காமல் காத்துக்கொள்ள முடியும் என்றும், புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள் மற்றும் படிப்பகங்களுக்கு நூல்களை வழங்கத் தயராக இருப்பதாகவும் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு திமுக தலைவராகப் பொறுப்பேற்ற காலத்தில் இருந்து, தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்களும் பொதுமக்களும் சால்வைகள் மற்றும் பூங்கொத்துகள் வழங்குவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாகப் பயனுள்ள புத்தகங்களை அன்பளிப்பாகத் தருமாறு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த வேண்டுகோளை ஏற்றுத் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் வழங்கிய நூல்கள் குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தி குறிப்பில், கற்றனைத்து ஊறும் அறிவு. 2018-இல் தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து, என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, சால்வைகளுக்குப் பதிலாகப் புத்தகங்களையே அன்பளிப்பாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை இப்படி பெறப்பட்ட 6 இலட்சம் நூல்களைத் தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பெயரை மாற்றினாலும் ஸ்டாலின் கொண்டுவந்த திட்டங்கள் அழியாது...தவெக அரசை சாடிய ஆர்.எஸ்.பாரதி!
தொடர்ந்து அந்த நற்செயலின் அடுத்தகட்டப் பணிகள் குறித்துப் பகிர்ந்துள்ள அவர், இதன் தொடர்ச்சியாக, பாளையங்கோட்டை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மறுவாழ்விற்காகவும், தாம்பரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள நூலகத்துக்காகவும் மேலும் 5 ஆயிரம் புத்தகங்களை இன்று வழங்கியுள்ளேன். புத்தகங்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்கள், நூலகத்தினர் மற்றும் படிப்பகத்தினர் முறைப்படி கடிதம் எழுதினால் அவர்களுக்கும் புத்தகங்களை வழங்கத் தயாராக இருக்கிறோம். வாசிப்பு இயக்கம் பெருகினால்தான் தமிழ்நாடு தன் அடையாளத்தை இழக்காமல் பாதுகாக்கப்படும்! என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!