×
 

தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிர்க்கடன் தள்ளுபடியில் முறைகேடு, மேகதாது விவகாரம் மற்றும் காவிரி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பிரச்சனைகளில் அலட்சியம் காட்டி வரும் தவெக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சை மாநகரில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் சுடச்சுடப் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசுக்கு எதிராகப் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.  

அவரது அறிக்கையில், பயிர்க்கடன் தள்ளுபடியில் பெரும் மோசடி, மேகதாது பிரச்சனையில் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, மேட்டூர் அணையில் இருந்து வழக்கமான ஜூன் 12-ஆம் தேதியில் தண்ணீர் திறக்கத் தவறியது, காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுப்பது மற்றும் கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்கப் போவதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை உலவவிட்டு ஆழம் பார்ப்பது எனத் தமிழ்நாட்டு விவசாயிகளுக்குத் துரோகத்திற்கு மேல் துரோகம் செய்து வருகிறது இந்த Shooting Model தவெக அரசு எனக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கொள்கை, தவெகவின் கொள்கையா இல்லையா? ஆலூர் ஷா நவாஸ் சரமாரி கேள்வி!

மேலும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பந்தாடும் விவசாய விரோத CallSheet அரசுக்குத் தக்க பாடம் புகட்டும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திமுகவின் சார்பில் தஞ்சை மாநகரில் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை மீட்க தஞ்சையில் பெருந்திரளாகக் கூடுவோம் எனத் தொண்டர்களுக்கும் விவசாயிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share