#REDALERT எதிரொலி... மூடப்பட்ட சுற்றுலா தளங்கள்.. நீலகிரியில் தீவிர கண்காணிப்பு..!
ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் நீலகிரியில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரியில் அவ்வப்போது மழை நீடித்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை நீடித்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகம் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நீலகிரி மற்றும் கோவையில் பலத்த காற்று மற்றும் தொடர் மழை காரணமாக மரங்கள் விழுதல், சாலை மறிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிகனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால், மண் சரிவு மற்றும் சாலைகளில் மரங்கள் விழுந்து பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒரு நாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைப்போல் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையும் படிங்க: ஜில் கிளைமேட்.. வெயிலுக்கு டாட்டா! சரியான மழை இருக்கு.. எங்க தெரியுமா?
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மழை மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் அவசரகால எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
1077 அல்லது 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றும் 9488700588 என்ற எண்ணிற்கு whatsapp மூலம் தகவல் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
இதையும் படிங்க: வெளிய போகாதீங்க மக்களே.. இந்த 2 ஊருக்கு மஞ்சள் அலர்ட்டாம்.. வானிலை மையத்தின் 'ஜில்' அப்டேட்..!