×
 

42 ரிசார்டுகளுக்கு சீல்... அதிரடி காட்டிய மாவட்ட நிர்வாகம்..! ஹைகோர்ட்டில் அறிக்கை தாக்கல்..!!

சட்டவிரோத ரெசார்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு பகுதிகளில் ஒன்று. புலிகள், யானைகள் உள்ளிட்ட அரிய வனவிலங்குகளின் இருப்பிடமாக விளங்கும் இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக ரிசார்ட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வந்தது பல ஆண்டுகளாக விவாதப் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீடு மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை காரணமாக பல ரிசார்ட்டுகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கம் நிறுவனர் கற்பகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதமாக ஏராளமான ரிசார்ட்டுகள் செயல்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். வனவிலங்குகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டிய இடத்தில் தனியார் விடுதிகள் அமைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் சீர்குலைவு ஏற்படுவதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களுக்கு எதிராக இது இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக செயல்படும் ரிசார்ட்டுகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. குறிப்பாக, ஜனவரி 2026-ல் வழக்கு விசாரணையின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜனவரி 19-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்த உத்தரவுக்குப் பின்னர் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: ஜூலை 10 முதல் குடும்பத்தோடு மேலாளர் அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்!

ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள ரிசார்ட்டுகள் குறித்து வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பெரும்பாலான விடுதிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சட்டவிரோதமாக இயங்கிய 42 தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயப் பகுதியில் மொத்தம் 53 ரிசார்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 11 உரிய அனுமதிகளுடன் செயல்படுவதாகவும், மீதமுள்ள 42 எவ்வித அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக இயங்கியதால் சீல் வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசார்ட் உரிமையாளர்களுக்கு முன்னதாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட போதும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்தது. 

இதையும் படிங்க: அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share