அதிகரிக்கப்போகுது வெப்பம்..!! மக்களே.. வெளில போகாதீங்க..!! சுகாதாரத்துறை வார்னிங்..!!
பகல் நேரங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தீவிர வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப அளவு கடுமையாக உயர்ந்து வருவதால், மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க பொது சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, வெயிலின் உச்சக்கட்ட நேரமான காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில் வெளியே செல்வது உடலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் ஆகியோர் பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!
இவர்கள் வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், அவர்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருப்பது அவசியம். கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெயிலில் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டியவர்கள் இந்தக் காலகட்டத்தில் வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும்போது போதிய ஓய்வு, நிழல் பகுதிகளில் தங்குதல் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.
வெப்பத்தால் நீரிழப்பு (dehydration) ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம், உடல் மிகுந்த சோர்வு, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இத்தகைய பாதிப்புகளைத் தவிர்க்க, உடலில் நீர் அளவை எப்போதும் போதுமான அளவில் பராமரிக்க வேண்டும். கட்டாயம் வெளியே செல்ல வேண்டியிருந்தால், குடை அல்லது தொப்பி பயன்படுத்தி நேரடி வெயிலில் இருந்து தவிர்க்க வேண்டும். மேலும், தளர்வான, வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
சூரிய ஒளியைத் தடுக்க சன்கிளாஸ் அணிவதும் பயனுள்ளதாக இருக்கும்.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பானங்களான மது, காபி, தேநீர், செயற்கை குளிர்பானங்கள் ஆகியவற்றை இந்தக் காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இவை உடலில் நீரிழப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும். வெயிலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இளநீர், பல்வேறு பழச்சாறுகள், நுங்கு போன்ற இயற்கையான பானங்களை அடிக்கடி அருந்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உடலுக்கு தேவையான நீர் மற்றும் சத்துக்களை வழங்கி, வெப்பத்தால் ஏற்படும் சோர்வை குறைக்க உதவும்.
மக்கள் அனைவரும் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி, தங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. வெயில் தாக்கத்தால் ஏதேனும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்ககிட்டையே உங்க வேலையைக் காட்டுறீங்களா?... திமுக முக்கிய தலைகளை எச்சரித்த பொள்ளாச்சி ஜெயராமன்...!