×
 

லஞ்சப் புகார் மற்றும் அலைச்சல் இல்லை.. புதிய கார்-பைக் பதிவுக்கு RTO விதிமுறையில் புதிய மாற்றம்!

சொந்தப் பயன்பாட்டு வாகனங்களுக்கு  உயர் நீதிமன்றம் ஆய்வில் விளக்கு அளித்த நிலையில், உத்தரவைத் தொடர்ந்து இன்று முதல் ஆன்லைன் பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

புதிதாகச் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களை நேரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO) கொண்டு வந்து ஆய்வு மேற்கொள்ளும் நடைமுறை இன்று முதல் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. லஞ்சப் புகார்கள், பொதுமக்களின் அலைச்சல் மற்றும் ஒரு நாள் நேர விரயத்தைக் கருத்தில் கொண்டு, சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கார் மற்றும் பைக் பதிவுகளில் புரட்சிகரமான புதிய விதிமுறை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுவரை, புதிய வாகனங்களை வாங்கும்போது, அவற்றைக் கண்டிப்பாக RTO அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் ஆய்வுக்குட்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. இதனால் வாகன உரிமையாளர்களோ அல்லது டீலர்களோ அலுவலகத்துக்கு அவசியம் வர வேண்டியிருந்தது மட்டுமல்லாமல், அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்க வேண்டிய கட்டாயமும் உருவானதாகப் பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தப் பழைய நடைமுறையால் டீலர்கள், வாகனம் வாங்குவோரிடம் இதர செலவு என்ற பெயரில் குறிப்பிட்ட தொகையை வசூலித்து வந்தனர்.


இந்த நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி, “சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை உரிமையாளர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்குக் கொண்டு வரத் தேவையில்லை” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்தத் திருத்தம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்ததைக் கண்டித்து, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரத்தியேக பயன்பாட்டு வாகனங்களுக்கு RTO அலுவலகத்துக்கு வாகனத்தைக் கொண்டு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழகமெங்கும் உள்ள 150 RTO மற்றும் யூனிட் அலுவலகங்களுக்கு இந்தப் புதிய விதியை டிசம்பர் 1 முதல் நடைமுறைப்படுத்தப் போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "விரக்தி மனநிலையில் இருந்து வெளியே வாங்க" - எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்...!

அதிரடியாக அமல்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்படி, சொந்தப் பயன்பாட்டிற்கான வாகனங்களை இனி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து, பதிவு செய்து கொள்ளலாம். இதனால், தினசரி தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பதிவு செய்யப்படும் சுமார் 3,000 முதல் 4,000 வரையிலான வாகன உரிமையாளர்களுக்கு இருந்த பெரும் சிரமம் குறைந்துள்ளது. எனினும், இந்தப் புதிய விதிமுறைகள் வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்குப் பொருந்தாது. வணிக வாகனங்களுக்கு மட்டும் RTO அலுவலகத்துக்கு ஆய்வுக்குக் கொண்டு செல்லும் நடைமுறை தொடரும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதையும் படிங்க: மெரீனாவுக்கு போகாதீங்க..!! கொந்தளிக்கும் கடல் அலைகள்.. வீசும் சூறாவளிக்காற்று..!! மக்களுக்கு வார்னிங்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share