×
 

விண்ணை தொட்ட சரண கோஷம்! சுடர்விட்டு பிரகாசித்த மகரஜோதி; பரவசத்தில் அய்யப்ப பக்தர்கள்!

சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை, சுவாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர். 

சபரிமலை அய்யப்பன் கோயிலின் சிகர நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. பொன்னம்பலமேடு மலை உச்சியில் அய்யன் ஜோதி வடிவில் மூன்று முறை காட்சியளித்த போது, லட்சக்கணக்கான பக்தர்களின் ‘சரண கோஷம்’ விண்ணைப் பிளக்கும் வகையில் சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுதோறும் தை மாதம் முதல் தேதியன்று நடைபெறும் இந்த மகா ஜோதி தரிசனத்தைக் காண்பதற்காக, கடந்த சில நாட்களாகவே சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைக் குன்றுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முகாமிட்டிருந்தனர். இன்று மாலை பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருவாபரணங்கள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. சரியாக மாலை 6.40 மணி அளவில் தீபாராதனை முடிந்த சில நொடிகளில், சன்னிதானத்திற்கு எதிரே உள்ள பொன்னம்பலமேட்டில் தெய்வீக ஒளி சுடர்விட்டுப் பிரகாசித்தது. இதனைக் கண்ட பக்தர்கள், “சுவாமியே சரணம் அய்யப்பா” என நெகிழ்ச்சியுடன் முழக்கமிட்டு அய்யனைத் தரிசித்தனர்.

மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலையில் திருவாபரணப் பெட்டி சன்னிதானத்திற்கு வந்தடைந்ததும், தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் அய்யப்பனுக்கு வைரக் கிரீடம் மற்றும் தங்க அங்கிகள் அணிவிக்கப்பட்டன. தீபாராதனை காட்டப்பட்ட அதே நேரத்தில், பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் அய்யன் மூன்று முறை காட்சியளித்தார். இந்த அற்புதக் காட்சியைக் காண்பதற்காகப் புல்மேடு, சந்நிதானம், பம்பை உள்ளிட்ட இடங்களில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டிருந்தனர். ஜோதி தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் 18-ஆம் படி வழியாகச் சென்று அய்யனைத் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் தரிசனம் நடைபெறுவதை உறுதி செய்யப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜோதி வடிவில் காட்சி தந்த அய்யனைக் கண்டு பக்தர்கள் ஆனந்தக் கண்ணீருடன் மலையிலிருந்து இறங்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலையில் பறந்த தவெக கொடி..!! உடனே கேட்ட குரல்..!! இருந்தாலும் இவங்க பண்ற அலப்பறைய தாங்க முடியல..!!

இதையும் படிங்க: நாளை சபரிமலை மகரஜோதி... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... ஸ்தம்பிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share