கறி விருந்துக்கு அழைத்து கொலை! மனைவியுடன் நெருக்கம் காட்டிய நண்பனின் கதையை முடித்த கணவன்!
நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்த சத்யன், மண்டை மணியின் மனைவியுடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை பகுதியில் திருமணத்தை மீறிய உறவு தொடர்பான தகராறில் வாலிபர் ஒருவர் மதுபாட்டிலால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாம்பவர்வடகரையைச் சேர்ந்த சத்யன், 35, திருமணமானவர். குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சாம்பவர்வடகரையில் வசிக்கும் அவரது நண்பர் சுப்பிரமணியன் என்ற மண்டை மணியின் மனைவியுடன் சத்யனுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சொந்த ஊருக்கு வந்த சத்யன், மண்டை மணியின் மனைவியுடன் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மண்டை மணி அவரை நேரில் சந்தித்து கண்டித்த நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அக்கம் பக்கத்தினர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: வேன்–கார் நேருக்கு நேர் மோதல்… நொடியில் பற்றி எரிந்த வாகனங்கள்! வங்கி உதவி மேலாளர் உடல் கருகி பலி!
இதன் பின்னரும் ஆத்திரம் குறையாத நிலையில், திருமண வீட்டில் நடைபெற்ற கறி விருந்துக்கு சத்யனை மண்டை மணி அழைத்ததாக கூறப்படுகிறது. இதை நம்பி சென்ற சத்யன், சுரண்டை சாலையில் உள்ள மயான காத்திருப்பு கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது.
அங்கு மண்டை மணி உள்ளிட்ட சிலர் மது அருந்திய நிலையில், மீண்டும் தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அப்போது மதுபாட்டிலால் சத்யனின் தலையில் தாக்கியதுடன், அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சத்யன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த சாம்பவர்வடகரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட தடயங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சுப்பிரமணியன் என்ற மண்டை மணி, கருப்பசாமி மற்றும் ஐயப்பன் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தென்காசியில் வீட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து வெடித்து விபத்து?! நொடியில் தரைமட்டமான வீடு! 2 குழந்தைகள் படுகாயம்!