நேரடி அதிகாரி உத்தரவை மட்டும் கேளுங்கள்! டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி சுற்றறிக்கை!
அதிகார வரம்பு மீறி உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தால் கவனத்திற்கு கொண்டு வருமாறு தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) சந்தீப் ராய் ரத்தோர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (SP) மற்றும் சிறப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு மிக முக்கியமான அதிரடிச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். காவல்துறையில் நிலவும் அதிகாரப் படிநிலைகளை (Hierarchy) உறுதிப்படுத்தும் வகையிலும், தேர்தல் பாதுகாப்புப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையிலும் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை அதிகாரிகள் பலர் தங்களது நேரடி மேலதிகாரிகளுக்கு அப்பாற்பட்ட பிற அதிகாரிகளிடமிருந்து அலுவல் ரீதியான உத்தரவுகளைப் பெற்று வருவதை டி.ஜி.பி. சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் காலங்களில், தங்களுக்கு மேலதிகாரிகளாக இல்லாத மற்ற அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டாம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். யாரேனும் அதிகார வரம்பை மீறி உத்தரவு பிறப்பித்தால், அது குறித்து உடனடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தலைவர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்துத் தனக்கும், சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். இணையத் தொடர்புப் பிரச்சனைகள் இருந்தால், குறைந்தபட்சம் குறுஞ்செய்தி (SMS) வாயிலாகவாவது தகவலைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு மற்றும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை முன்னிட்டு, மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்களுடன் டி.ஜி.பி. ஆலோசனையில் ஈடுபட்டார்: தேர்தல் பிரச்சாரத்திற்காக முக்கியத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பயணம் செய்வதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாநில எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். மதுபானம் மற்றும் சட்டவிரோதப் பணப் புழக்கத்தைத் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். வன்முறை ஏற்பட வாய்ப்புள்ள பதற்றமான பகுதிகளில் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், நேர்மையான தேர்தலை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி, எவ்வித அசம்பாவிதங்களும் இன்றித் தேர்தலை நடத்தி முடிக்கத் தமிழகக் காவல்துறை முழுவீச்சில் தயாராகி வருகிறது.
இதையும் படிங்க: தேர்தல் களம்: வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்! மாலை 3 மணியுடன் அவகாசம் முடிகிறது!